‘நாட்டில் சைபர் மோசடி தடுப்பு பிரிவு இல்லாதது ஏன்?’ - பணத்தை இழந்த திரிணமூல் எம்.பி கேள்வி

‘நாட்டில் சைபர் மோசடி தடுப்பு பிரிவு இல்லாதது ஏன்?’ - பணத்தை இழந்த திரிணமூல் எம்.பி கேள்வி
Updated on
1 min read

புதுடெல்லி: திரிண​மூல் காங்​கிரஸ் எம்பி கல்​யாண் பானர்​ஜி​யின் வங்​கிக் கணக்​கில் இருந்து ரூ.57 லட்​சம் மோசடி செய்​யப்​பட்டது. தற்போது அந்த பணம் அவரது வங்கிக் கணக்கில் மீண்டும் பெறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, ‘நாட்டில் சைபர் மோசடி தடுப்பு பிரிவு ஏன் இல்லை?’ என நிதி அமைச்சகத்தை நோக்கி அவர் கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் கூறியது: “மக்கள் பிரதிநிதியான நானே சைபர் மோசடியால் பாதிக்கப்பட்ட நிலையில் சாமானிய மக்களை கொஞ்சம் எண்ணி பார்க்க வேண்டி உள்ளது. நிதி அமைச்சகம் ஏன் சைபர் மோசடி தடுப்பு பிரிவை அமைக்கவில்லை?

என்னுடைய வங்கிக் கணக்கில் ரூ.57 லட்சம் உள்ளது என்பதை எப்படி இந்த மோசடியாளர்கள் கண்டறிந்தார்கள். கேஒய்சி சரிபார்ப்பு மூலம் இந்த மோசடி நடந்துள்ளதாக தகவல். இது குறித்து விசாரணை நடந்து வருகிறது. எஸ்பிஐ வங்கியும் புகார் அளித்துள்ளது. இருப்பினும் வெள்ளிக்கிழமை அன்று எனது வங்கி கணக்கில் அந்த பணத்தை மீண்டும் வங்கித் தரப்பு கிரெடிட் செய்தது” என அவர் கூறியுள்ளார்.

மோசடி நடந்து எப்படி? - கடந்த 2001-2006 காலகட்டத்தில் கல்​யாண் பானர்​ஜி​ மேற்குவங்க மாநில சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தபோது இந்த வங்கிக் கணக்கை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. கல்​யாண் பானர்​ஜி​யின் ஊதி​யம், படிகள் இந்த வங்​கிக் கணக்​கில் செலுத்​தப்​பட்​டன.

தற்​போது ஸ்ரீ​ராம்​பூர் தொகுதி எம்​பி​யாக கல்​யாண் பானர்ஜி பதவி வகிக்​கிறார். எம்​பி​யான பிறகு கொல்​கத்​தா​வில் உள்ள பொதுத்​துறை வங்​கிக் கணக்கை அவர் மிக நீண்ட காலமாக பயன்​படுத்​த​வில்​லை. அவர் தெற்கு கொல்​கத்​தா​வில் உள்ள மற்​றொரு வங்​கிக் கணக்கை மட்​டுமே பயன்​படுத்தி வரு​கிறார்.

இந்தச் சூழலில் ஒரு மோசடி கும்​பல், கல்​யாண் பானர்ஜி பெயரில் போலி பான் கார்​டு, ஆதார் கார்டை தயாரித்து அவரது தெற்கு கொல்​கத்தா வங்​கிக் கணக்​கின் மொபைல் போன் எண்ணை மாற்றி உள்​ளனர்.

இதன் மூலம் அந்த வங்​கிக் கணக்​கின் ஆன்​லைன் பரிவர்த்​தனை வசதி​கள் மோசடி கும்​பலின் வசமானது. இதைத் தொடர்ந்து தெற்கு கொல்​கத்தா வங்​கிக் கணக்​கில் இருந்து கல்​யாண் பானர்​ஜி​யின் பழைய வங்​கிக் கணக்​குக்கு ரூ.56 லட்​சம் பணம் பரி​மாற்​றம் செய்​யப்​பட்​டது. இதன்​பிறகு பழைய வங்​கிக் கணக்​கில் இருந்து பல்​வேறு வங்​கிக் கணக்​கு​களுக்கு பணம் மாற்​றப்​பட்டு உள்​ளது.

மேலும், பானர்​ஜி​யின் வங்​கிக் கணக்கை பயன்​படுத்தி நகைக்​கடைகளில் பெருந்​தொகைக்கு நகைகள் வாங்​கப்​பட்டு உள்​ளன. பல்​வேறு ஏடிஎம் மையங்​களில் இருந்​தும் பணம் எடுக்​கப்​பட்டு இருக்​கிறது. இதன்​படி அவரது வங்​கிக் கணக்​கில் இருந்த ரூ.57 லட்​ச​மும் மோசடி செய்​யப்​பட்​டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in