

சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் ஜெயலலிதாவை குற்றம் செய்யத் தூண்டவில்லை என்று வழக்கறிஞர் அமித் தேசாய் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகி யோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை, பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா முன்னிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் சுதாகரன், இளவரசி சார்பில் மும்பை வழக்கறிஞர் அமித் தேசாய், 4-வது நாளாக தனது இறுதி வாதத்தை முன்வைத்தார். அவர் வாதிடும்போது, “சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவரும் நமது எம்.ஜி.ஆர்., சூப்பர் டூப்பர் டி.வி. உள்ளிட்ட பல்வேறு நிறு வனங்களை நடத்திவந்தனர். அந்த நிறுவனங்களின் அனைத்து பண பரிவர்த்தனைகளையும் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸார் சொத்துக்குவிப்பு வழக்கில் முக்கிய ஆதாரங்களாக இணைத்துள்ளனர்.
ஆனால் அந்த நிறுவனங்களில் இருந்து மூவருக்கும் வந்த வரு மானத்தை கணக்கில் எடுத்துக்கொள்ள வில்லை. லஞ்ச ஒழிப்பு போலீஸார் திட்டமிட்டே இந்த வருமானத்தை புறக்கணித்துள்ளனர்.
ஜெயலலிதாவை தூண்டவில்லை
ஜெயலலிதாவுக்கு சொந்தமான ஹைதராபாத் திராட்சைத் தோட்டத்தில் இளவரசியின் கணவர் ஜெயராமன் பணியாற்றி வந்தார்.அப்போது ஏற்பட்ட மின் விபத்தில் அவர் இறந் தார். அதன்பிறகு இளவரசிக்கு ஜெய லலிதா தனது வீட்டில் அடைக்கலம் கொடுத்தார்.
ஜெயலலிதாவின் வீட்டில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் இருந்தார்கள் என்பதால் அவர்கள் கூட்டுச்சதியில் ஈடுபட்டார்கள் என கூறமுடியாது. மேலும் மூவரும் ஜெயலலிதாவை அதிகார துஷ்பிர யோகம் செய்து குற்றம் செய்யத் தூண்டினார்கள் என்றும் கூறிட முடியாது. எனவே தக்க ஆதாரமும், எவ்வித சாட்சியமும் இல்லாமல் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸார் குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ள கூட்டுச்சதி, குற்றம் செய்ய தூண்டுதல் ஆகியவை முற்றிலும் தவறானவை” என்றார்.
தொடர்ந்து வாதிட்ட அமித் தேசாய், “நான் ஆஜராக வேண்டிய பல வழக்குகள் மும்பை நீதிமன்றத்தில் உள்ளன. எனவே நான் அடுத்த வாரமும் தொடர்ந்து வாதிட அனுமதிக்க வேண்டும்” என்றார்.
இதற்கு கடும் ஆட்சேபம் தெரி வித்த நீதிபதி, “நீங்கள் அடுத்த வாரமும் வாதிடுங்கள்.அதற்குமுன் சசிகலாவின் வழக்கறிஞர் மணிசங்கர் புதன்கிழமை தனது இறுதிவாதத்தை தொடரட்டும்” என்றார்.