

புனே: மகாராஷ்டிர மாநிலம் புனே நகரை சேர்ந்த ஐ.டி. பொறியாளர் தீபக் டோலாஸ் சில நாட்களுக்கு முன், நாசிக் நகரை சேர்ந்த பெண் சாமியார் ஒருவருக்கு எதிராக புகார் அளித்திருந்தார்.
தீபக் டோலாஸின் 2 மகள்கள் உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை தனது ஆன்மிக சக்தியால் குணப்படுத்துவதாக பெண் சாமியார் உறுதி அளித்துள்ளார். தீபக் டோலாஸுக்கு இங்கிலாந்தில் இருந்த வீடு, புனே நகரில் இருந்த நிலம், சொந்த ஊரில் இருந்த விவசாய நிலம் உள்ளிட்ட சொத்துகளை விற்கும்படி பெண் சாமியார் வற்புறுத்தியுள்ளார். இதன் மூலம் அவர் சுமார் ரூ.14 கோடி பெற்றுள்ளார்.
இவ்வளவு பணம் கொடுத்தும் தனது மகள்கள் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை எனவும் தான் ஏமாற்றப்பட்டதாகவும் புகாரில் தீபக் டோலாஸ் கூறியிருந்தார். இதன் அடிப்படையில் அந்தப் பெண் சாமியார் உள்ளிட்ட 3 பேர் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.