Published : 05 Nov 2025 06:39 AM
Last Updated : 05 Nov 2025 06:39 AM
பாட்னா: பிஹாரில் வரும் பொங்கல் பண்டிகையின்போது பெண்களுக்கு தலா ரூ.30,000 நிதியுதவி வழங்கப்படும் என்று ராஷ்டிரிய ஜனதா தள (ஆர்ஜேடி) முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
நவ. 6, 11 ஆகிய தேதிகளில் பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் ஆர்ஜேடி தலைமையிலான மெகா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. பிஹாரில் பெண்கள் சுய தொழில் தொடங்க பிஹார் அரசு சார்பில் அண்மையில் சுமார் ஒரு கோடி பெண்களுக்கு தலா ரூ.10,000 நிதியுதவி வழங்கப்பட்டது. இதற்கு போட்டியாக ஆர்ஜேடி முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் புதிய வாக்குறுதியை அளித்துள்ளார்.
இதுதொடர்பாக பாட்னாவில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பிஹாரில் ஆர்ஜேடி தலைமையிலான மெகா கூட்டணி ஆட்சி அமைத்தால் இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் பலன் அடையும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும். வரும் ஜனவரி 14-ம் தேதி மகர சங்கராந்தி (பொங்கல்) பண்டிகையை ஒட்டி, தாய்- சகோதரி திட்டத்தின் கீழ் பெண்களுக்கு தலா ரூ.30,000 நிதியுதவி வழங்கப்படும். அடுத்த 5 ஆண்டுக்கு ஆண்டுதோறும் இத்தொகை வழங்கப்படும். அதோடு பெண்களுக்கு மாதந்தோறும் தலா ரூ.2,000 நிதியுதவி வழங்கப்படும்.
குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று எங்களது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டு உள்ளது. இதை நிச்சயம் நிறைவேற்றுவோம். மேலும் விவசாயிகளுக்காக இலவச மின்சார திட்டம் செயல்படுத்தப்படும். கடந்த 20 ஆண்டுகளாக தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. ஆனால் மாநிலம் இன்னமும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கிறது. இளைஞர்கள் வேலை தேடி வெளிமாநிலங்களுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி குஜராத்துக்கு முன்னுரிமை அளிக்கிறார். அந்த மாநிலத்தில் புதிய ஆலைகளை தொடங்குகிறார். வாக்குக்காக மட்டுமே அவர் பிஹாருக்கு வந்துள்ளார். முதல்வர் நிதிஷ் குமார் பெயரளவுக்கு மட்டுமே முதல்வராக நீடிக்கிறார். டெல்லியில் இருந்தே பிஹாரை ஆட்சி செய்கின்றனர். குஜராத்தை சேர்ந்தவர்கள் பிஹாரை ஆட்சி செய்ய அனுமதிக்க மாட்டோம்.
நான் 17 மாதங்கள் துணை முதல்வராக பதவி வகித்தேன். அப்போது 5 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்தேன். எனக்கு மீண்டும் வாய்ப்பு அளித்தால் வேலைவாய்ப்பின்மை பிரச்சினைக்கு முழுமையாக தீர்வு காண்பேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT