காய்ச்சலோடு கோலார் சுரங்கத்தில் இறங்கிய கருணாநிதி

காய்ச்சலோடு கோலார் சுரங்கத்தில் இறங்கிய கருணாநிதி
Updated on
1 min read

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி மரண பயம் இல்லாதவர். கடும் காய்ச்சல் இருந்தபோதும் கோலார் தங்க சுரங்கத்தில் ஆயிரம் அடி ஆழத்தில் இறங்கி பார்த்தவர் அவர்.

கருணாநிதி கடந்த 1957-ம் ஆண்டு கர்நாடக மாநிலம் கோலார் தங்கவயலுக்கு கடுமையான காய்ச்சலோடு வந்தார். அங்கிருந்த திமுகவினர் ‘ஏன் இவ்வளவு காய்ச்சலோடு பயணம் செய்தீர்கள்?’ என்று அவரிடம் கேட்டன‌ர். அதற்கு கருணாநிதி, ‘‘காய்ச்சலை விட கொடுமையானது தென்னவர் மீதான வடவரின் பாய்ச்சல். அதனை விரட்ட வேண்டியது நமது கடமை’’ என கரகர குரலில் பதிலளித்துள்ளார்.

பின்னர் கருணாநிதி, ‘‘சங்க கால தமிழர்கள் வீரத்தோடு போர் புரிந்ததன் மூலம் புறநானூறு படைத்திட கருவாக இருந்தார்கள். தங்கவயல் தமிழர்கள் உயிருக்கு அஞ்சாமல் ஆயிரமாயிரம் அடி ஆழத்தில் தினமும் சுரங்கத்துக்குள் சென்று புதிய புறநானூறு படைக்கிறார்கள். பூமியின் ஆழத்தில் இருந்து தங்கத்தை எப்படி வெட்டி எடுக்கிறார்கள் என்பதை காண வேண்டும்’’ எனக்கூறியுள்ளார்.

அதற்கு திமுக ஆதரவாளர்களாக இருந்த சுரங்க தொழிலாளர்கள் மறுத்துள்ளனர். மேலும், ‘’உள்ளே போனால் பிணம். மேலே வந்தால் பணம்’ என்ற பழமொழியே தங்கவயல் தமிழர்களின் நிலையை கண்டு உருவாக்கப்பட்டது. பல ஆயிரம் அடிக்கு கீழே போய் மேலே வருவது என்பது ஆபத்தானது. இவ்வளவு காய்ச்சலோடு சுரங்கத்தில் இறங்குவது, மரணத்தோடு விளையாடுவது போன்றது. எனவே வேண்டாம்’’ என எச்சரித்துள்ளனர்.

இதைக் கேட்டும், துளியும் பயம் இல்லாத கருணாநிதி, ராமசந்திரன் என்கிற சுரங்க தொழிலாளியின் கம்பளி ஸ்வெட்டரை அணிந்து உள்ளே இறங்க தயாரானார். அவருக்கு பாறை வெடிப்பின் போது கற்கள் தலையில் விழாமல் தடுக்கும் சுரங்க தொழிலாளரின் கூடை தொப்பியை அணிவித்தனர். பின்னர் ஆயிரம் அடிக்கு கீழே சுரங்கத்தில் சென்று தமிழர்கள் தங்கத்தை வெட்டியெடுப்பதை கருணாநிதி பார்த்துள்ளார்.

பின்னர் மாலையில் இதுபற்றி கருணாநிதி மேடையில் பேசும் போது, ‘‘காலையிலே சுரங்கத்தில் கட்டி தங்கங்களை கண்டேன். மாலையிலே அதனை வெட்டி யெடுக்கும் சிங்கங்களை காண்கின்றேன்’’என தன் கரகர குரலில் சிங்கார சொற்களில் முழங்கினார். தங்கவயலில் எழுந்த கரவொலி அங்குள்ள மலைகளில் பட்டு எதிரொலித்துக்கொண்டே இருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in