

பாட்னா: உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியாக பாஜக விளங்குகிறது. இந்த கட்சியின் செயல்பாடுகளை உலக நாடுகள் அறிந்து கொள்ளும் வகையில் கடந்த 2022-ம் ஆண்டில் ‘பாஜகவை அறிந்து கொள்வோம்’ என்ற இயக்கத்தை கட்சியின் தலைவர் ஜே.பி. நட்டா தொடங்கினார்.
இதன்படி பாஜக தலைமை சார்பில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள், தூதர்களுடன் கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த காலங்களில் குஜராத், இமாச்சல பிரதேசம், ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தல்களின்போது, பாஜகவின் செயல்பாடுகளை அறிந்து கொள்ள ஏதுவாக பல்வேறு நாடுகளின் தூதர்கள் இந்தியாவுக்கு அழைக்கப்பட்டனர்.
தற்போது பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி ‘பாஜகவை அறிந்து கொள்வோம்’ இயக்கத்தில் வெளிநாடுகளின் தூதர்கள் அழைக்கப்பட்டு உள்ளனர். இதன்படி ஜப்பான், இந்தோனேசியா, டென்மார்க், ஆஸ்திரேலியா, பிரிட்டன், பூடான், தென் ஆப்பிரிக்கா ஆகிய 7 நாடுகளின் தூதர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக நேற்று பாட்னா சென்றடைந்தனர். அவர்கள் பாஜகவின் தேர்தல் பிரச்சாரங்களை ஆய்வு செய்ய உள்ளனர்.
இதன்மூலம் இந்திய ஜனநாயகத்தை பற்றி அவர்கள் முழுமையாக அறிந்து கொள்வார்கள். பிஹாரின் முக்கிய தொகுதிகளுக்கு 7 நாடுகளின் தூதர்களும் நேற்று சுற்றுப் பயணம் மேற்கொண்டனர். இன்றும் அவர்கள் பல்வேறு தொகுதிகளுக்கு சென்று பார்வையிட உள்ளனர். பாஜக மூத்த தலைவர்கள் உட்பட கடைநிலை தொண்டர்கள் வரை அவர்கள் சந்தித்து கலந்துரையாட உள்ளனர்.