

கட்சிரோலி: மாவோயிஸ்ட் அமைப்பில் பொலிட் பீரோ மற்றும் மத்தியக் குழு உறுப்பினராக இருந்தவர் வேணுகோபால் ராவ் என்ற பூபதி. இவர் கடந்த மாதம் 14-ம் தேதி போலீஸார் முன் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடைந்தார்.
இவருடன் சேர்ந்து ரூபேஷ் என்ற முக்கியத் தலைவரும் சரணடைந்தார். இந்நிலையில் தன்னுடன் இருந்த மாவோயிஸ்ட் தோழர்களுக்கு வீடியோ மூலம் வேண்டுகோள் ஒன்றை பூபதி விடுத்துள்ளார்.
அதில் அவர், “மாவோயிஸ்ட் தோழர்கள் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு மக்களுடன் இணைந்து பணியாற்றும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும். அதிகாரம் மற்றும் நிலப் பகுதிக்காக நாம் ஆயுதம் ஏந்தி போராடியது, நம்மை மக்களிடம் இருந்து பிரித்துவிட்டது. இது நமது பாதை தவறு என்பதை காட்டியுள்ளது. இதனால் மாவோயிஸ்ட்டுகள் வன்முறையை கைவிட்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.