

டேராடூன்: உத்தராகண்டில் விபத்தில் இறந்த ஒருவரின் குடும்பத்துக்கு நைனிடாலில் உள்ள மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் 2024 நவம்பரில் ரூ.53.93 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. ஆனால் இன்சூரன்ஸ் நிறுவனம், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கில் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இது தொடர்பாக நீதிபதி அலோக் மெஹ்ரா பிறப்பித்த உத்தரவில், “மோட்டார் வாகனச் சட்டம் அன்பு, பாசம், குடும்ப ஆதரவை இழந்ததை ஈடு செய்கிறது. தீர்ப்பாயம் மிகவும் சரியாகவே தீர்ப்பு அளித்துள்ளது.
இழப்பீடு என்பது வெறும் நிதி நிவாரணம் மட்டுமல்ல, சமூக நீதியின் அடையாளம். மோட்டார் விபத்து இழப்பீடு வழக்குகளில், நீதிமன்றங்கள் தாராளமான மற்றும் மனிதாபிமான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.