

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தின் வெள்ளிவிழா ஆண்டை முன்னிட்டு, ரூ.324 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய சட்டப்பேரவை கட்டிடத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.
நாட்டின் 26-வது மாநிலமாக சத்தீஸ்கர் கடந்த 2000-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி உதயமானது. இதன் முதல் சட்டப்பேரவை கூட்டம் ராய்ப்பூரில் உள்ள கல்லூரியில் அமைக்கப்பட்ட தற்காலிக கூடாரத்தில் கடந்த 2000-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது.
இந்நிலையில் புதிய ராய்ப்பூர் நகரில் 52 ஏக்கர் நிலத்தில் புதிய சட்டப்பேரவை கட்டிடம் ரூ.324 கோடி செலவில் கட்ட கடந்த 2020-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. இதன் கட்டுமான பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன. மிக நவீனமாக கட்டப்பட்டுள்ள இந்த கட்டிடத்தில் சட்டப்பேரவை, சட்டப்பேரவை செயலகம் மற்றும் மத்திய அரங்கு என 3 முக்கிய பகுதிகள் உள்ளன. அனைத்து பகுதிகளும் சத்தீஸ்கர் பாரம்பரியம் மற்றும் நவீன கட்டிடக்கலை அம்சங்களை இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இதன் உள்பகுதி அரண்மனை போலவும், வெளிப்புற வடிவமைப்பு ராஷ்டிரபதி பவனை போலவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கரில் தற்போது 90 எம்எல்ஏ.க்கள் உள்ளனர். ஆனால், சட்டப்பேரவையில் 120 உறுப்பினர்கள் அமரும் வகையில் இடவசதி செய்யப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையின் கீழ் சத்தீஸ்கர் மாநிலம் உருவானதால், சட்டப்பேரவையின் நுழைவுப் பகுதியில் வாஜ்பாய் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தின் வெள்ளிவிழாவை முன்னிட்டு, புதிய சட்டப்பேரவை கட்டிடத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். இதில் மாநில ஆளுநர், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.