

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் உள்ள துவாரபாலகர் சிலையின் தங்க கவசங்களில் இருந்து சுமார் நான்கரை கிலோ தங்கம் திருடுபோன வழக்கில் பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். பிறகு இரண்டாவது குற்றவாளியாக தேவஸ்தான முன்னாள் நிர்வாக அதிகாரி முராரி பாபு கைதானார்.
இருவரையும் இந்த வார தொடக்கத்தில் சிஐடி போலீஸார் ஒன்றாக விசாரித்தனர். பிறகு ஆதாரங்களை திரட்டுவதற்காக சபரிமலைக்கு அழைத்துச் சென்றனர். கர்நாடக மாநிலம் பெல்லாரியில் இருந்து மீட்கப்பட்ட தங்கத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.
இந்நிலையில் இருவரின் போலீஸ் காவல் முடிவுக்கு வந்ததால் இருவரையும் போலீஸார் நேற்று ரான்னி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர், உன்னிகிருஷ்ணனை திருவனந்தபுரம் சிறப்பு துணை சிறைக்கு மாற்ற நீதிபதி உத்தரவிட்டார். இதுபோல் முராரி பாபுவை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில் கோயில் கதவின் சட்டங்களில் இருந்து தங்கம் மாயமானது தொடர்பான மற்றொரு வழக்கில் உன்னி கிருஷ்ணனை சிஐடி போலீஸார் நேற்று கைது செய்தனர். இந்த வழக்கில் அவரை வரும் திங்கட்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.