

போபால்: மத்திய பிரதேச மாநிலம் குவாலியரைச் சேர்ந்த சங்கர்லால் ஸ்ரீவாஸ்தவா 23 ஆண்டுகளாக காவல் துறையில் பணியாற்றி 1971-ல் பணியிலிருந்து விலகி 1985-ல் காலமானார். அவருடைய மனைவி மிதிலேஷ் ஸ்ரீவாஸ்தவா (79), தனது கணவரின் ஓய்வூதியம், பணிக்கொடை உள்ளிட்ட சலுகைகளை கேட்டு அளித்த மனுக்கள், ஆவணங்கள் துறை சார்ந்த அதிகாரிகளின் அலட்சியத்தால் காணாமல் போயின. இதையடுத்து அவர் சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
இதற்கு நடுவே, அவருக்கு தற்காலிக ஓய்வூதியமாக மாதத்துக்கு வெறும் ரூ.33 வழங்கப்படுகிறது. பல ஆண்டு போராட்டத்துக்குப் பிறகு. 2005-ல் மிதலேஷுக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனாலும் காணாமல் போன ஆவணங்களை காரணம் காட்டி ஓய்வூதியம் தருவதை அரசு தாமதப்படுத்தியது.
இதையடுத்து, மிதிலேஷ் மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தின் குவாலியர் அமர்வில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, “நவம்பர் மாதத்துக்குள் கீழ் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்” என உத்தரவிட்டார்.