

ஹைதராபாத்: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் இன்று தெலங்கானா அமைச்சராக பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் ஜிஷ்ணு தேவ் வர்மா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான அமைச்சரவையில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில், முகமது அசாருதீன் அமைச்சராக நியமிக்கப்படுவார் என பேசப்பட்டு வந்தது. இதை உறுதிப்படுத்தும் விதமாக, சட்டப்பேரவை உறுப்பினராக இல்லாத அவரை ஆளுநர் கோட்டாவில் சட்ட மேலவை உறுப்பினராக தேர்வு செய்ய தெலங்கானா அமைச்சரவை கடந்த ஆகஸ்ட் மாதம் ஆளுநருக்கு பரிந்துரை செய்தது. எனினும், இந்த பரிந்துரைக்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் வழங்கவில்லை.
இந்நிலையில், அசாருதீன் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். ஹைதராபாத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இதற்கான விழாவில், ஆளுநர் ஜிஷ்ணு தேவ் வர்மா, அசாருதீனுக்கு பதிவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். இதில், முதல்வர் ரேவந்த் ரெட்டி, அசாருதீன் குடும்பத்தினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தெலங்கானாவின் ஜூபிலி ஹில்ஸ் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், அதில் காங்கிரஸ் கட்சி சார்பில் அசாருதீன் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 30%-க்கு மேல் முஸ்லிம்கள் உள்ள தொகுதி என்பதால், அவருக்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இதனிடையே, அசாருதீன் அமைச்சராக்கப்பட்டிருப்பதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள மாநில பாஜக செய்தித் தொடர்பாளர், அசாருதீனை அமைச்சராக்குவது தேர்தலில் அதிகார துஷ்பிரயோகத்துக்கே வழிவகுக்கும் என எச்சரித்துள்ளார்.
அசாருதீன் அமைச்சராக்கப்பட்டிருப்பதன் மூலம் மாநில அமைச்சரவையில் சிறுபான்மையினருக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்படுவதற்கான கட்சியின் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெலங்கானா காங்கிரஸ் தலைவர் மகேஷ் கவுட் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சிறுபான்மையினருக்கு கேபினெட்டில் பிரதிநிதித்துவம் அளிக்கப்படும் என்ற காங்கிரசின் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆந்திரப் பிரதேசத்திலும் சிறுபான்மையினர் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளனர். நீண்ட காலமாக செயல் வடிவம் பெறாமல் இருந்ததை நாங்கள் தற்போது நிறைவேற்றியுள்ளோம்" என தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை உறுப்பினராகவோ அல்லது சட்ட மேலவை உறுப்பினராகவோ இல்லாத அசாருதீன், அடுத்த 6 மாதங்களுக்குள் இவற்றில் ஏதேனும் ஒன்றின் உறுப்பினராக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.