

அமராவதி: ‘‘மோந்தா புயலால் ஆந்திர மாநிலத்தில் ரூ.5,265 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது’’ என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
ஆந்திர மாநிலம், நரசாபுரம் அருகே செவ்வாய்க்கிழமை நள்ளிரவு மோந்தா புயல் கரையை கடந்தது. இதன் தாக்கத்தால் ஆந்திராவில் பல மாவட்டங்களில் அதிகமான பயிர்கள் நாசமடைந்தன. நூற்றுக்கணக்கில் கால்நடைகள் இறந்தன. இன்னமும் பிரகாசம், ஓங்கோல், கோனசீமா, விசாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் மக்கள் வெள்ள பாதிப்பால் தவித்து வருகின்றனர். பலர் வீடுகளை இழந்து வாடுகின்றனர். முகாம்களில் தங்க வைக்கப்பட்டவர்களுக்கு ஆந்திர அரசு தரப்பில் தலா ரூ.1,000 நிதி உதவி வழங்கப்பட்டு, அத்தியாவசிய பொருட்களும் இலவசமாக வழங்கப்பட்டன.
ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண், கிருஷ்ணா மாவட்டம், ஆவினிகட்டா தொகுதியில் உள்ள கோடூரு கிராமத்தில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேற்று ஆய்வு செய்தார். இந்நிலையில், அமராவதியில் உயர் மட்ட அதிகாரிகளுடன் முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மோந்தா புயல் கரையை கடந்துவிட்டது. எனினும், கட்டிடம் மற்றும் சாலை மேம்பாட்டு துறை சார்பில் ரூ.2,079 கோடி, வேளாண் துறை சார்பில் ரூ.829 கோடி, தோட்டக்கலை துறை சார்பில் ரூ.39 கோடி, பட்டு நூல் துறை சார்பில் ரூ.65 கோடி என மொத்தம் ரூ.5,265 கோடி அளவுக்கு உள்கட்டமைப்புகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
ஹுத் புயல் விசாகப்பட்டினத்தை தாக்கியபோது கிடைத்த அனுபவத்தால், தற்போது மோந்தா புயல் விஷயத்திலும் தொழில்நுட்பத்தை உபயோகப்படுத்தி அதிக பாதிப்பு இல்லாமல் பார்த்துக் கொண்டோம். இதில் கடினமாக உழைத்த மின் வாரியம், போலீஸ், தீயணைப்பு, துப்புரவு, வருவாய்த் துறையினருக்கு எனது வாழ்த்துக்கள். இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேசினார்.