

முசாபர்பூர் (பிஹார்): “பிஹார் தேர்தல் போரில் வெற்றி பெற இரண்டு இளவரசர்கள் பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளனர். ஒருவர் இந்தியாவின் மிகவும் ஊழல் நிறைந்த குடும்பத்தின் இளவரசர். மற்றொருவர் பிஹாரின் மிகவும் ஊழல் நிறைந்த குடும்பத்தின் இளவரசர். இருவர் மீதும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இருவரும் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.” என தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு முசாபர்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பாஜக மூத்த தலைவரும் பிரதமருமான நரேந்திர மோடி, “பிஹாரில் கொண்டாடப்பட்ட சாத் பண்டிகைக்குப் பிறகான எனது முதல் பொதுக்கூட்டம் இது. சாத் பண்டிகை பிஹார் மற்றும் நாட்டின் பெருமை. சாத் தேவி வழிபாடு என்பது தாய் மீதான பக்தியின் வெளிப்பாடு. மனித குலத்தின் ஒரு சிறந்த விழாவாக சாத் பண்டிகையை யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் சேர்க்க நாங்கள் தொடர்ந்து பாடுபடுகிறோம்.
சாத் தேவியின் புகழைப் பரப்புவதில் நாங்கள் மும்முரமாக இருக்கிறோம். ஆனால், காங்கிரஸும் ராஷ்ட்ரிய ஜனதா தளமும் சாத் தேவியை அவமதிக்கிறார்கள். தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்காக யாராவது சாத் தேவியை அவமதிக்க முடியுமா?. சாத் பண்டிகையை முன்னிட்டு உண்ணாவிரதம் இருக்கும் எனது அருமை தாய்மார்களால் இத்தகைய அவமானத்தைப் பொறுத்துக்கொள்ள முடியுமா? அவர்களைப் பொறுத்தவரை சாத் தேவியை வழிபடுவது ஒரு தந்திரம். அத்தகையவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமா இல்லையா?
பிஹாரின் பெருமையை மேம்படுத்துவது, அதன் இனிமையான மொழி மற்றும் கலாச்சாரத்தை உலகின் ஒவ்வொரு மூலைக்கும் கொண்டு செல்வது, பிஹாரை வளர்ப்பது ஆகியவையே பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முன்னுரிமைகள். இந்தியா பொருளாதார ரீதியில் வளமாகவும், அறிவு ரீதியில் மிகப் பெரிய சக்தியாகவும் இருந்தபோது அதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தது பிஹார். எனவே, இன்று வளர்ந்த இந்தியாவை உருவாக்க பிஹாரின் வளர்ச்சி மிகவும் முக்கியம். ஆர்ஜேடி மற்றும் காங்கிரசால் பிஹாரை ஒருபோதும் வளர்க்க முடியாது. இந்த கட்சிகள் பல ஆண்டுளாக பிஹாரை தனித்து ஆட்சி செய்தன. ஆனால், அவர்கள் செய்தது அனைத்தும் துரோகமே.
கொடுமை, தவறான ஆட்சி, ஊழல் ஆகியவற்றுக்குப் பெயர் போனவர்கள் காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி. இவர்கள் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு தோல்வியைத்தான் அடையும். இவர்கள் இருக்கும் இடத்தில் சமூக நல்லிணக்கம் இருப்பது கடினம். இவர்கள் ஆட்சியில் வளர்ச்சிக்கான எந்த தடையமும் இல்லை. ஊழல் இருக்கும் இடத்தில் சமூக நீதி இருக்காது. இவர்களால் ஏழைகளின் உரிமைகள் கொள்ளையடிக்கப் படுகின்றன. ஒரு சில குடும்பங்கள் மட்டுமே செழிக்கின்றன.
பிஹார் முன்னேற தொழில் வளர்ச்சி தேவை. அதற்கு நிலம், மின்சாரம், மற்றும் சட்டத்தின் ஆட்சி தேவை. பிஹாரை விளக்கு சகாப்தத்தில் (ஆர்ஜேடியின் தேர்தல் சின்னம் லாந்தர் விளக்கு) வைத்திருப்பவர்களால் மின்சாரத்தை வழங்க முடியுமா? ரயில்வேயைக் கொள்ளையடித்தவர்கள், பிஹாரில் ரயில்வே மேம்பாட்டை கொண்டு வருவார்களா?
பிஹாரில் இன்று ரயில் இயந்திரங்கள் தயாரிக்கப்படுகின்றன. பெரிய பால் பண்ணைகள் அமைக்கப்படுகின்றன. மக்கானா (ஒரு வகை தானியம்) உலக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. காட்டாட்சியின் நாட்களை நாம் நினைவுகூர்ந்தால், நிலைமை எவ்வளவு ஆபத்தானது என்பதை நாம் கற்பனை செய்யலாம்.
பிஹார் தேர்தல் போரில் வெற்றி பெற இரண்டு இளவரசர்கள் பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளனர். ஒருவர் இந்தியாவின் மிகவும் ஊழல் நிறைந்த குடும்பத்தின் இளவரசர். மற்றொருவர் பிஹாரின் மிகவும் ஊழல் நிறைந்த குடும்பத்தின் இளவரசர். இருவர் மீதும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இருவரும் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.” என தெரிவித்தார்.