டெல்லி மாணவி ஆசிட் வீச்சு வழக்கில் திருப்பம்: மகளுடன் சேர்ந்து தந்தை போட்ட நாடகம் அம்பலம்!

அகில் கான்
அகில் கான்
Updated on
1 min read

புதுடெல்லி: டெல்லியில் கல்லூரி மாணவி மீதான ஆசிட் வீச்சு சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், வழக்கில் முக்கிய திருப்பமாக மாணவியின் தந்தை தன் மீதான பாலியல் வழக்கை திசை திருப்பும் விதமாக இந்த நாடகத்தை அரங்கேற்றியது தெரியவந்துள்ளது.

வடக்கு டெல்லியின் முகுந்த்பூரைச் சேர்ந்த கல்லூரி மாணவி மீது ஞாயிற்றுக் கிழமையன்று காலையில் அசோக் விஹாரில் உள்ள லட்சுமிபாய் கல்லூரி அருகே ஜிதேந்தர் என்பவர் தனது இரண்டு கூட்டாளிகளுடன் சேர்ந்து ஆசிட் வீச்சு தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியானது.

ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி தீப் சந்த் பந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அழைப்பு வந்ததாக டெல்லி போலீஸார் தெரிவித்தனர். கல்லூரிக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, ​​இஷான் மற்றும் அர்மானுடன் சேர்ந்து ஜிதேந்தர் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்து தனது முகத்தில் ஆசிட் வீச முயன்றதாக அந்த மாணவி குற்றம்சாட்டினார். மேலும், அவர் தனது முகத்தை மூடிக்கொண்டதாகவும், அதனால் இரு கைகளிலும் தீக்காயங்கள் ஏற்பட்டதாகவும் கூறினார். ஜிதேந்தர் தொடர்ச்சியாக தன்னைப் பின்தொடர்ந்து வந்ததாகவும், ஒரு மாதத்திற்கு முன்பு அவருடன் கடுமையான வாக்குவாதம் நடந்ததாகவும் அந்தப் பெண் கூறினார்.

இந்த நிலையில் போலீஸார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதன்படி, ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவியின் தந்தை அகில் கான், ஜிதேந்தரை சிக்கவைக்க இந்த சதித்திட்டத்தை தீட்டியது தெரிய வந்துள்ளது.

காவல்துறையினரின் விசாரணையில், ஆசிட் வீச்சு சம்பவம் நடைபெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, அக்டோபர் 24 ஆம் தேதி, ஜிதேந்தரின் மனைவி, அகில் கான் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், ஆபாச புகைப்படங்களை தனக்கும், தனது கணவருக்கும் அனுப்பி மிரட்டியதாகவும் புகார் அளித்தது தெரியவந்தது.

ஜிதேந்தரின் மனைவி தனக்கு எதிராக பாலியல் வன்கொடுமை புகார் அளித்ததை அறிந்ததும், அதனை திசை திருப்பும் வகையில் இந்த போலி ஆசிட் வீச்சு தாக்குதலைத் திட்டமிட்டதாக அகில் கான் ஒப்புக்கொண்டார். அகில் கானின் மகள் தந்தைக்கு உதவும் வகையில் கழிப்பறையை சுத்தம் செய்யும் ஆசிட்டை வாங்கி, தன் மீது ஊற்றிக்கொண்டு இந்த நாடகத்தை நடத்தியுள்ளனர்.

2021 மற்றும் 2024 க்கு இடையில் அகில் கானின் தொழிற்சாலையில் பணிபுரிந்தபோது, ​​அவர் தன்னை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பி மிரட்டியதாகவும் ஜிதேந்தரின் மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து அகில் கானை போலீஸார் கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in