

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாயின் பதவிக்காலம் நவம்பர் 23-ம் தேதியுடன் நிறைவடைகிறது.
இந்நிலையில், அடுத்த தலைமை நீதிபதியின் பெயரை பரிந்துரைக்குமாறு பி.ஆர். கவாய்க்கு மத்திய சட்ட அமைச்சகம் அண்மையில் கடிதம் எழுதியது. அடுத்த தலைமை நீதிபதி நியமன நடவடிக்கைகள் ஒரு மாதத்துக்கு முன் தொடங்குவதை முன்னிட்டு இந்தக் கடிதம் எழுதப்பட்டிருந்தது.
இந்நிலையில் உச்ச நீதிமன்ற மரபுப்படி தனக்கு பிறகு மூத்த நீதிபதியாக உள்ள சூர்ய காந்தின் பெயரை 53-வது தலைமை நீதிபதியாக நியமிக்க மத்திய அரசுக்கு தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் பரிந்துரை செய்துள்ளார்.
அடுத்த தலைமை நீதிபதி சூர்ய காந்த், ஹரியானா மாநிலத்தின் ஹிசார் நகரில் 1962-ம் ஆண்டு பிப்ரவரி 10-ம் தேதி பிறந்தவர். இவர் 2004, ஜனவரியில் பஞ்சாப், ஹரியானா உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2018, அக்டோபரில் இமாச்சல பிரதேச தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். 2019 மே 24-ல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.