குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை தமிழகம் வருகை

குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை தமிழகம் வருகை
Updated on
1 min read

புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவராக தேர்வான பிறகு சி.பி. ராதாகிருஷ்ணன் முதன்முறையாக நாளை (செவ்வாய்க்கிழமை) மூன்று நாள் பயணமாக தமிழகம் வருகிறார்.

இது தொடர்பாக குடியரசு துணைத் தலைவர் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கை: குடியரசு துணைத் தலைவராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக சி பி ராதாகிருஷ்ணன் நாளை தமிழகம் வருகிறார். மூன்று நாள் பயணமாக தமிழகம் வரும் அவர், கோவை, திருப்பூர், மதுரை மற்றும் ராமநாதபுரத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

அரசு முறைப் பயணமாக செஷல்ஸ் நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன், அந்நாட்டு அதிபர் டாக்டர் பாட்ரிக் ஹெர்மினியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கிறார். பின்னர் அவர், நாளை (அக்.28) கோவை திரும்புகிறார். கோவை விமான நிலையத்தில் அவரை வரவேற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பின்னர், கோவையில் உள்ள கொடிசியா வர்த்தக மையத்தில் கோவை மக்கள் மன்றத்தின் சார்பில் குடியரசு துணைத் தலைவருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது.

கோவை டவுன்ஹாலின் நகராட்சி வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு சி.பி.ராதாகிருஷ்ணன் மரியாதை செலுத்துகிறார். பின்னர், பேரூர் மடத்திற்கு செல்லும் அவர், சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் பங்கேற்கிறார். அன்று மாலை கோவையிலிருந்து திருப்பூர் புறப்பட்டுச் செல்லும் சி.பி.ராதாகிருஷ்ணன், அங்குள்ள திருப்பூர் குமரன் மற்றும் மகாத்மா காந்தி சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்.

நாளை மறுநாள் (அக்.29) திருப்பூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் சி.பி.ராதாகிருஷ்ணன், பின்னர் மதுரை செல்கிறார். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அவர் வழிபாடு செய்கிறார். இதனைத் தொடர்ந்து இம்மாதம் 30-ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெறும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் பங்கேற்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in