

யூ.பி.எஸ்.சி. நுழைவுத் தேர்வு விவகாரம் தொடர்பாக, டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வீட்டின் முன், காங்கிரஸ் மாணவர் அணியினர் (என்.எஸ்.யூ.ஐ) சனிக்கிழமை போராட்டம் நடத்தினர்.
இந்த அமைப்பின் தேசிய செயலாளர் மோஹித் சர்மா தலைமையில் சுமார் 800 மாணவர்கள் சனிக்கிழமை காலை 9 மணியளவில் அப்பகுதியில் கூடினர். இவர்களை தடுத்து நிறுத்துவதற்காக டெல்லி போலீஸார் அசோகா சாலையில் இரும்பு தடுப்புகள் வைத்திருந்தனர். இந்த தடுப்புகள் முன்பும் அவற்றின் மீது ஏறி நின்றவாறும் மத்திய அரசுக்கு எதிராக மாணவர்கள் கோஷமிட்டனர்.
மாணவர் அணியினர் அனுமதியின்றி இப்போராட்டம் நடத்தியதால் அவர்களை போலீஸார் வாகனங்களில் ஏற்றி அருகிலுள்ள நாடாளுமன்ற சாலை காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். இதனால் சுமார் இரண்டு மணி நேரம் அங்கு பரபரப்பு நிலவியது.
என்.எஸ்.யூ.ஐ. தேசிய செய்தித் தொடர்பாளர் அம்ரிஷ் ரஞ்சன் பாண்டே செய்தியாளர்களிடம் கூறும்போது, “கடந்த புதன்கிழமை டெல்லி நேரு விஹாரில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீதான போலீஸ் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. இதில் காவலில் உள்ள மாணவர்களை உடனடியாக விடுவிப்பதுடன், தவறு செய்த போலீஸார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 25 நாட்களாக மாணவர்கள் போராடி வரும் நிலையில் அரசு எதையும் செய்ததாகத் தெரியவில்லை” என்றார்.
யூ.பி.எஸ்.சி. தேர்வில் 2001-ல் அறிமுகம் செய்யப்பட்ட சிசாட் எனும் துவக்க நிலை தேர்வின் வினாக்கள் கிராமப்புற மற்றும் தாய்மொழியில் பயின்ற மாணவர்களால் எழுத முடியாத நிலை இருப்பதாக போராட்டம் தொடங்கியது. கடந்த வாரம் இந்தப் போராட்டங்கள் தீவிரமடைந்ததால் இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் எழுப்பப் பட்டது. இது குறித்து ஆராய அமர்த்தப்பட்ட 3 நிபுணர்கள் குழு, தனது அறிக்கையை அரசிடம் அளித்துவிட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து ‘தி இந்து’விடம் அரசு வட்டாரங்கள் கூறும்போது, “சிசாட் வினாக்கள் கடினமானது என்பது உண்மைதான். அதை மாற்றினால் அதில் வெற்றி பெறும் மாணவர்கள் திறன் குறைந்தவர்களாக இருப்பார்கள் எனவும் அறிக்கை அளித்துள்ளனர். எனினும், அதில் சிறிய மாற்றமாவது செய்யும் முயற்சியில் மத்திய அரசு இறங்கி உள்ளது” என்றனர்.
இந்தப் பிரச்சினைக்கு முடிவு காண உள்துறை அமைச்சர் ராஜ்நாத் அளித்த காலக்கெடு இன்று (ஞாயிற்றுக்கிழமை) முடிவடைகிறது. இதனால் நாளை திங்கள்கிழமை நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத்தில், மத்திய அரசு, ஆகஸ்ட் 24-ல் நடைபெறவிருக்கும் சிசாட் தேர்வின் மீது புதிய மாற்றத்தை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.