

புதுடெல்லி: உத்தர பிரதேசம் பிரயாக்ராஜ் மாவட்டம் ஹாண்டியா பகுதியைச் சேர்ந்த இளைஞர், சவுதி அரேபியாவில் வேலை பார்க்க சென்றுள்ளார். அவருக்கு பாலைவனத்தில் ஒட்டகம் மேய்க்கும் வேலை வழங்கப்பட்டுள்ளது.
இந்த வேலை மிகவும் சிரமமாக உள்ளதால் அவர் தாய்நாடு திரும்ப விரும்புகிறார். ஆனால், அவரது முதலாளி கபில் என்பவர், தொழிலாளியின் பாஸ்போர்ட்டை வாங்கி வைத்துக்கொண்டு, கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளார். அந்த இளைஞர் சமூக ஊடகத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், ‘‘எனது கிராமம் அலகாபாத். நான் வேலை பார்க்க சவுதி அரேபியா வந்தேன். எனது பாஸ்போர்ட் கபில் என்பவரிடம் உள்ளது. நான் வீட்டுக்கு போக வேண்டும் என அவரிடம் கூறினேன். ஆனால், அவர் என்னை கொன்றுவிடுவதாக மிரட்டுகிறார். நான் என் அம்மாவிடம் செல்ல விரும்புகிறேன். எனக்கு பிரதமர் நரேந்திர மோடியும், வெளியுறவுத்துறை அமைச்சரும் உதவ வேண்டும். இல்லையென்றால் நான் இறந்துவிடுவேன்’’ என உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த வீடியோ சமூக ஊடகத்தில் வைரலாக பரவியது. இதையடுத்து சவுதி தலைநகர் ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் விடுத்துள்ள செய்தியில், ‘‘நாடு திரும்ப வேண்டுகோள் விடுத்த உ.பி. இளைஞரை கண்டுபிடிக்க முயற்சிக்கிறோம். அவர் சவுதி அரேபியாவில் எங்கு பணியாற்றுகிறார், தொலைபேசி எண், முதலாளி யார்? என்ற விவரம் வீடியோவில் இல்லை’’ என தெரிவித்துள்ளது.
சவுதி அரேபியாவில் வெளிநாட்டு தொழிலாளர்களை உள்ளூர் நபரின் கட்டுப்பாட்டில் பணியமர்த்தும் முறை ஒழிக்கப்படும், தொழிலாளர் உரிமைகள் மேம்படுத்தப்படும் என அந்நாட்டு அரசு சமீபத்தில் அறிவித்தது. இந்நிலையில் இந்த வீடியோ வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.