சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் மாயமான வழக்கில் கர்நாடக நகைக் கடையில் விற்கப்பட்ட 400 கிராம் தங்கம் பறிமுதல்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் மாயமான வழக்கில் கர்நாடக நகைக் கடையில் விற்கப்பட்ட 400 கிராம் தங்கம் பறிமுதல்
Updated on
1 min read

திருவனந்தபுரம்: சபரிமலையில் தங்கம் மாயமான விவகாரத்தில் கர்நாடகாவில் உள்ள ஒரு நகைக் கடையில் விற்கப்பட்ட 400 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் உள்ள 2 துவார பாலகர் சிலைகள் மற்றும் அதன் பீடத்தின் மீதான தங்கத் தகடுகளுக்கு தங்க முலாம் பூசும் பணி கடந்த 2019-ம் ஆண்டு உன்னி கிருஷ்ணன் போற்றியிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த பணி முடிந்த நிலையில் 4 கிலோ தங்கம் மாயமானதாக புகார் எழுந்தது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், தங்கம் மாயமானது குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) அமைத்தது. இந்த வழக்கு தொடர்பாக, உன்னிகிருஷ்ணன் போற்றி மற்றும் திருவாங்கூர் தேவசம் போர்டு (டிடிபி) முன்னாள் நிர்வாக அதிகாரி முராரி பாபு ஆகியோரை எஸ்ஐடி அதிகாரிகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் பெங்களூரு, பெல்லாரி, ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு எஸ்ஐடி அதிகாரிகள் குழுவினர் விரைந்துள்ளனர். திருவனந்தபுரம் மற்றும் பெங்களூருவில் உள்ள உன்னி கிருஷ்ணன் போற்றியின் வீடு, பெல்லாரியில் உள்ள ஒரு நகைக் கடை உள்ளிட்ட பல இடங்களில் எஸ்ஐடி அதிகாரிகள் நேற்று ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர்.

இதில், பெல்லாரி நகைக் கடையிலிருந்து ஐயப்பன் கோயிலில் மாயமான தங்கத்தில் சுமார் 400 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் முதன்மை குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள உன்னி கிருஷ்ணன் போற்றி தனது உதவியாளர் கோவர்தன் மூலம் அந்த நகைக் கடையில் விற்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதுபோல திருவனந்தபுரத்தில் உள்ள உன்னி கிருஷ்ணன் வீட்டில் இருந்து பல தங்க நாணயங்கள் மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

கோயில் புதுப்பித்தல் பணிகளில் ஈடுபட்ட தேவசம் வாரியத்தைச் சேர்ந்த மேலும் சில ஊழியர்களின் வாக்குமூலத்தையும் பதிவு செய்ய எஸ்ஐடி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இந்த வழக்கில் மேலும் சிலர் கைது செய்யப்படுவார்கள் எனத் தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in