

புதுடெல்லி: மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றிய பெண் மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு 2 போலீஸ் அதிகாரிகள் பாலியல் தொந்தரவு அளித்ததாக அவர் குறிப்பு எழுதி வைத்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் சதாரா மாவட்டம் பால்தான் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றியுள்ளார். இவரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபால் பதானே என்பவர் பாலியல் வன்கொடுமை செய்து கடந்த 5 மாதங்களாக பாலியல் தொந்தரவு அளித்து வந்துள்ளார். இந்நிலையில் பிரசாந்த் பங்கர் என்ற போலீஸ் அதிகாரியும் இவருக்கு மனரீதியான தொந்தரவு அளித்துள்ளார்.
இதனால் அந்த மருத்துவர் பால்தான் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் நேற்று முன்தினம் இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது மரணத்துக்கு கோபால் பதானே காரணம் எனவும், அவர் 4 முறை பாலியல் வன்கொடுமை செய்தார் எனவும் தனது உள்ளங்கையில் குறிப்பு எழுதியுள்ளார்.
இந்த தற்கொலை குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து, பெண் மருத்துவரின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை குறிப்பு குறித்து விசாரணை நடத்துவதாக போலீஸார் தெரிவித்தனர்.
இந்த கொடுமை குறித்து அப்பகுதி டிஎஸ்பிக்கு கடந்த ஜூன் மாதம் மருத்துவர் புகார் கடிதம் அனுப்பி உள்ளார். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த விவகாரம் குறித்து மகாராஷ்டிரா பெண்கள் ஆணைய தலைவி ரூபாலி சாகங்கர் கூறுகையில், ‘‘பெண் மருத்துவர் தற்கொலை சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சதாரா மாவட்ட காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளோம். குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படையினர் விரைந்துள்ளனர்’’ என்றார்.
இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட பெண் மருத்துவர் குறிப்பிட்டுள்ள போலீஸ் அதிகாரிகள் இருவரையும் உடனடியாக சஸ்பெண்ட் செய்து, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாநில முதல்வர் பட்னாவிஸ் உத்தரவிட்டுள்ளார்.