டெல்லியில் கடைகள், வணிக நிறுவனங்களில் பெண்களை இரவுப் பணிகளில் ஈடுபடுத்த மாநில அரசு அனுமதி

டெல்லியில் கடைகள், வணிக நிறுவனங்களில் பெண்களை இரவுப் பணிகளில் ஈடுபடுத்த மாநில அரசு அனுமதி
Updated on
1 min read

புதுடெல்லி: டெல்லியில் கடைகள், வணிக நிறுவனங்களில் பெண்களை இரவுப் பணிகளில் ஈடுபடுத்த அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.

கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பெண் பணியாளர்களை இரவுப் பணிகளில் ஈடுபடுத்துவதற்கான டெல்லி நகர அரசாங்கத்தின் திட்டத்துக்கு துணை நிலை ஆளுநர் வி.கே. சக்சேனா இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து, இது தொடர்பாக டெல்லி அரசின் தொழிலாளர் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், "டெல்லி கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சட்டம் 1954-ல் பெண்களை பணியில் அமர்த்துவது மற்றம் அவர்களின் பணி நிலைமைகள் தொடர்பாக இரண்டு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

அதன்படி, கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பெண் தொழிலாளர்கள் இரவுப் பணிகளில் பணிபுரிய அனுமதிக்கப்படுவார்கள். அதேநேரத்தில், இதற்கு அவர்களின் எழுத்துப்பூர்வ ஒப்புதல் கட்டாயம். எந்த ஒரு பணியாளரும் ஒருநாளில் 9 மணி நேரத்துக்கு மேலாக பணியமர்த்தப்பட மாட்டார்கள். இதேபோல், ஒரு வாரத்துக்கு 48 மணி நேரத்துக்கு மேல் பணியமர்த்தப்பட மாட்டார்கள்.

கூடுதல் நேரம் (overtime) அல்லது இரவுப் பணியில் ஈடுபட கேட்டுக்கொள்ளப்படும் ஊழியர்களுக்கான பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துக்கு உரிமையாளர்கள் பொருத்தமான ஏற்பாடுகளைச் செய்வார்கள். மேலும், எந்த ஒரு பணியாளரும் தொடர்ச்சியாக 5 மணி நேரத்துக்கு மேலாக பணி செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள். டெல்லி கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சட்டம் 1954-ன் கீழ் கூடுதல் நேரம் (overtime) பணிபுரிய பணியாளர்கள் கேட்டுக்கொள்ளப்படும்போது, அந்த கூடுதல் நேரத்துக்கான ஊதியம் இரண்டு மடங்காக இருக்கும். அதேபோல், எந்த ஒரு பணியாளரும் தொடர்ந்து இரவுப் பணியில் மட்டுமே வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள்.

முக்கியமாக, பெண் தொழிலாளர்களை ஈடுபடுத்தும் ஒவ்வொரு உரிமையாளரும் பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் சட்டம் 2013-ன் கீழ் உள் புகார்கள் குழு (Internal Complaints Committee) அமைப்பார்கள். பணிபுரியும் இடத்தில் சிசிடிவி கேமராக்களை நிறுவுவார்கள். அதன் பதிவுகள் ஒரு மாதம் வரை சேமித்து வைக்கப்படும். கடைகளின் தலைமை ஆய்வாளர்கள் கேட்கும்போது அவை சமர்ப்பிக்கப்படும். தேசிய விடுமுறை நாட்களில் பணிபுரிபவர்களுக்கு இழப்பீட்டு விடுப்பு, வாராந்திர விடுமுறை நாட்கள், குறைந்தபட்ச ஊதியம், வருங்கால வைப்பு நிதி, காப்பீடு, போனஸ் போன்ற சட்ட சலுகைகள் வழங்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in