

பாட்னா: பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரை பாஜக முதுகில் குத்துகிறது. எனவே அவர் மகா கூட்டணியில் சேர வேண்டும் என காங்கிரஸ் ஆதரவு சுயேச்சை எம்.பியான பப்பு யாதவ் அழைப்பு விடுத்தார்.
இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசிய பப்பு யாதவ், “பாஜக நிதிஷ் குமாரை பின்னால் இருந்து குத்துவதால் நான் அவரை மகா கூட்டணிக்கு அழைக்கிறேன். பாஜக அவரை முடித்து வைக்க பார்க்கிறது. ஆனால், எங்கள் கூட்டணித் தலைவர்கள் எப்போதும் அவரை மதிக்கிறார்கள். அவர் பின்னால் இருந்து குத்தப்படுகிறார், ஆனால் அவர் மீது எங்களுக்கு எப்போதும் மிகுந்த மரியாதை உண்டு.
பிஹார் தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தியின் படத்தை முன்னிலைப் படுத்த வேண்டும். ராகுல் காந்தியின் முகத்தால் மட்டுமே நாம் பிஹாரில் வெற்றி பெற முடியும். இங்கு வெற்றி பெற நமக்கு வேறு வழியில்லை.” என்றார்
பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14-ம் தேதி நடைபெறும்.
பிஹார் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், மகா கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி, ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்), இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா மற்றும் ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான மகாகட்பந்தனில் காங்கிரஸ் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் முகேஷ் சஹானியின் விகாஷீல் இன்சான் கட்சி ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.