

புதுடெல்லி: நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை மேற்கொள்வது தொடர்பாக அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.
பிஹாரில் அண்மையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆர்) மேற்கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், புதுச்சேரி, அசாம் ஆகிய மாநிலங்களில் எஸ்ஐஆர் பணியை மேற்கொள்ள ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த 5 மாநிலங்களோடு சேர்த்து நாடு முழுவதும் எஸ்ஐஆர் பணியை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில், அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளின் 2 நாள் மாநாடு டெல்லியில் நேற்று பிற்பகல் தொடங்கியது.
இதில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து, விவேக் ஜோஷி மற்றும் மூத்த அதிகாரிகள் பங்கேற்று உள்ளனர்.
இதுகுறித்து தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறும்போது, ‘‘நாடு முழுவதும் எஸ்ஐஆர் பணியை மேற்கொள்வது தொடர்பாக மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படுகிறது. இதில் எஸ்ஐஆர் பணியை எப்போது தொடங்குவது, எவ்வாறு பணிகளை மேற்கொள்வது என்பன குறித்து விவாதிக்கப்படுகிறது’’ என தெரிவித்தன.