Last Updated : 18 Aug, 2018 04:19 PM

 

Published : 18 Aug 2018 04:19 PM
Last Updated : 18 Aug 2018 04:19 PM

கடவுளின் தேசத்துக்கு குவியும் உதவிகள்; ஆம் ஆத்மி எம்எல்ஏ, எம்.பி.க்கள் ஒருமாத ஊதியம்: பிஹார், தெலங்கானா தாராளம்

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து உதவிகள் குவிந்து வருகின்றன. ஆம் ஆத்மி கட்சி எம்.பி., எம்எல்ஏக்கள் தங்களின் ஒரு மாத ஊதியத்தை கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு அளிக்க உள்ளனர். டெல்லி அரசு சார்பில் ரூ.10 கோடி நிவாரண உதவியாக அளிக்கப்பட உள்ளது.

இது தவிர தெலங்கானா, பிஹார் அரசுகளும் உதவி செய்வதாகத் தெரிவித்துள்ளன.

கேரள மாநிலத்தில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பெருமழை பெய்து வருகிறது. மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதுவரை 300-க்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியாகியுள்ளனர்.

மாநிலத்தில் மீட்புப் பணிக்காக ராணுவத்தினர், கடற்படையினர், விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

வெள்ளத்தில் வீடுகளையும், உடைமைகளையும் இழந்து நிவாரண முகாம்களில் தங்கி இருக்கும் மக்களுக்கு உதவிகளை பல்வேறு மாநில அரசுகளும், தன்னார்வ அமைப்புகள் ஆர்வத்துடன் செய்து வருகின்றனர்.

இதில் டெல்லி முதல்வரும், ஆம்ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்துக்கு டெல்லி அரசு சார்பில் ரூ.10 கோடி வழங்கப்படும் என நேற்று அறிவித்தார். மேலும், ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் ஆகியோர் தங்களின் ஒருமாத ஊதியத்தை கேரள மக்களின் நிவாரணத்துக்கு அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.

இது தவிர பிஹா மாநில அரசு ரூ.10 கோடி நிதியை கேரள மாநிலத்தின் நிவாரணத்துக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது. அந்த மாநில முதல்வர் நிதிஷ் குமார் முதல்வர் பினராயி விஜயனுக்கு எழுதிய கடிதத்தில், ''முதல்வர் நிவாரண நிதிக்காக ரூ.10 கோடியை அனுப்பி இருக்கிறேன். இது எங்கள் மாநிலத்தின் சார்பில் மிகச் சிறிய பங்களிப்பு ஏற்றுக்கொள்ளுங்கள்.

எங்களைக் காட்டிலும் இயற்கை சீற்றங்களால் யாராலும் பாதிக்கப்பட்டிருக்க முடியாது என்பது தெரிந்திருக்கும். விரைவில் கேரள மக்கள் அனைத்து பாதிப்புகளில் இருந்தும் மீண்டும் வருவார்கள் என்று நம்புகிறோம். வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன். ஏராளமான மக்கள் வெள்ளத்தாலும், பெருமழையாலும் உடைமைகளையும், சொத்துகளையும் இழந்துள்ளனர். அனைவருக்கும் என இரங்கலையும் தெரிவித்து விரைவில் இழப்பில் இருந்து மீண்டுவர வாழ்த்துகிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.

இது தவிர தெலங்கானா மாநில அரசு சார்பில் கேரள மாநிலத்தின் நிவாரணத்துக்காக ரூ.25 கோடி வழங்கப்படும் என்று அந்த மாநில முதல்வர் கே.சந்திரசேகர்ராவ் இன்று அறிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x