Published : 18 Oct 2025 02:40 AM
Last Updated : 18 Oct 2025 02:40 AM
புதுடெல்லி: அடுத்த 40 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பிரதமரே உலகத்தின் தலைவராக செயல்படுவார் என்று ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் டோனி அபோட் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நேற்று நடைபெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது: கடந்த 2022-ம் ஆண்டு இந்தியா, ஆஸ்திரேலியா இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. அண்மையில் இந்தியா, பிரிட்டன் இடையே இதே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. பல்வேறு உலக நாடுகள் சீனாவிடம் இருந்து விலகி இந்தியாவுடன் கைகோத்து வருகின்றன.
உலகத்தை ஆட்டிப் படைக்க சீனா விரும்புகிறது. உலக அரங்கில் சர்வாதிகாரத்தை நிலைநாட்ட அந்த நாடு தீவிர முயற்சி செய்கிறது. இது சீனாவின் அண்டை நாடுகளுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகத்துக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தும்.
21-ம் நூற்றாண்டு, இந்தியாவின் நூற்றாண்டு ஆகும். சீனாவைவிட இந்தியாவுக்கு சாதகமான பல்வேறு அம்சங்கள் உள்ளன. உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா விளங்குகிறது. மேலும் இந்தியாவின் உள்கட்டமைப்பு வசதிகள் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக பல்வேறு நகரங்களில் புதிய விமான நிலையங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் ஜனநாயகம் தழைத்தோங்கி வருகிறது. அதோடு இந்தியர்களின் ஆங்கில மொழி அறிவு மிகப்பெரிய ஊக்க சக்தியாக இருக்கிறது. பொருளாதாரரீதியாகவும் ராணுவரீதியாகவும் சீனாவை எதிர்கொள்ளும் திறன் இந்தியாவுக்கு மட்டுமே இருக்கிறது. உலகின் ஜனநாயக வல்லரசாக இந்தியா உருவெடுக்கும். அடுத்த 40 முதல் 50 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பிரதமரே உலகத்தின் தலைவராக செயல்படுவார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை நான் ஆதரிக்கிறேன். ஆனால் இந்தியாவின் மீது அவர் கூடுதல் வரிகளை விதித்ததை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த விவகாரத்தில் அவர் தவறு இழைத்திருப்பதாக கருதுகிறேன்.
ரஷ்யாவிடம் இருந்து சீனாவே அதிக அளவில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறது. அந்த நாட்டின் மீது கூடுதல் வரி விதிக்காமல் இந்தியாவின் மீது வரி விதித்ததை ஏற்றுக் கொள்ள முடியாது. இவ்வாறு டோனி அபோட் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT