“லாலுவின் காட்டாட்சியில் இருந்து பிஹாரை விடுவித்தவர் நிதிஷ் குமார்” - பிரச்சாரத்தில் அமித் ஷா புகழாரம்

“லாலுவின் காட்டாட்சியில் இருந்து பிஹாரை விடுவித்தவர் நிதிஷ் குமார்” - பிரச்சாரத்தில் அமித் ஷா புகழாரம்
Updated on
1 min read

சரண்: “லாலு பிரசாத் யாதவின் காட்டாட்சியில் இருந்து பிஹாரை விடுவித்தவர் நிதிஷ் குமார்” என பிஹாரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டு தெரிவித்துள்ளார்.

பிஹாரின் சரண் மாவட்டத்தில் உள்ள சாப்ராவில், தரையா தொகுதியில் மீண்டும் போட்டியிடும் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினர் ஜனக் சிங், அம்னூர் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் கிரிஷன் குமார் மான்டூ ஆகியோரை ஆதிரித்து அமித் ஷா தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர், “20 ஆண்டுகளுக்கு முன்பு லாலு பிரசாத் யாதவும், ராப்ரி தேவியும் பிஹாரில் எவ்வாறு காட்டாட்சி நடத்தினார்கள் என்பதை இளைஞர்களுக்கு எடுத்துச் சொல்ல சரண் மாவட்டத்தின் சாப்ராவைவிட சிறந்த நிலம் இல்லை.

எங்கள் அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, இப்பகுதியில் இடப்பெயர்வு, கப்பம், கொலைகள், கடத்தல்கள் வழக்கமாக இருந்தன. அப்போது, லாலுவின் காட்டாட்சிக்கு எதிராக தேசிய ஜனநாயகக் கூட்டணியும் ஐக்கிய ஜனதா தளமும் போராடின. இப்போது, அந்தக் காட்டாட்சி மனநிலைக்கு எதிராக நாங்கள் போராடுகிறோம்.

அயோத்தியில் பகவான் ஸ்ரீராமர், 500 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு குடிசையில் வாழ்ந்தார். தற்போது ராமருக்கு பிரம்மாண்டமான கோயில் கட்டப்பட்டுள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டு விழாவை நடத்தி, கோயில் கட்டுமானத்தை தொடங்கிவைத்து, கும்பாபிஷேகம் செய்து கோயில் திறக்கப்பட காரணமாக இருந்தவர் பிரதமர் மோடி. தற்போது, பிஹாரில் அன்னை சீதா தேவிக்கு பிரம்மாண்ட கோயில் கட்டப்பட்டு வருகிறது.

பிஹார் தற்போது மாற்றங்களால் நிரம்பியுள்ளது. பிஹாரின் ஒரு முனையில் இருந்து மற்றொரு முனைக்குச் செல்ல 5 மணி நேரம்கூட ஆகாது. அந்த அளவுக்கு உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இந்த வளர்ச்சிக்கு பிரதமர் மோடியும் முதல்வர் நிதிஷ் குமாருமே காரணம். தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் பிஹாரில் ஏராளமான பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகளை கட்டியுள்ளன.

பிஹாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு நிதிஷ் குமார் தலைமை வகிக்கிறார். அவரது தலைமையில் நாங்கள் போட்டியிடுகிறோம். நாடு தழுவிய அளவில் இந்தக் கூட்டணியை பிரதமர் மோடி வழிநடத்துகிறார். ஊடகங்களுக்கு நான் ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன். இந்த தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய வெற்றியைப் பெறும். எங்கள் கூட்டணியே மீண்டும் ஆட்சி அமைக்கப் போகிறது" என்று அமித் ஷா பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in