Last Updated : 14 Oct, 2025 11:14 PM

1  

Published : 14 Oct 2025 11:14 PM
Last Updated : 14 Oct 2025 11:14 PM

ராஜஸ்தானில் தீப்பிடித்து எரிந்த பேருந்து; 20 பேர் உயிரிழப்பு: பிரதமர் மோடி இரங்கல்

ஜோத்பூர்: ராஜஸ்தானில் ஜெய்சால்மரிலிருந்து ஜோத்பூர் சென்று கொண்டிருந்த பேருந்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டதில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஜெய்சால்மரிலிருந்து பிற்பகல் 3 மணிக்கு ஜோத்பூர் நோக்கி புறப்பட்ட பேருந்து ஜெய்சால்மர் - ஜோத்பூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, பேருந்தின் பின்பகுதியில் இருந்து புகை வெளியாகியுள்ளது. இதனை அறிந்த பேருந்து ஓட்டுனர் உடனடியாக பேருந்தை ஓரம்கட்டி நிறுத்த முயற்சித்துள்ளார். எனினும் கண்ணிமைக்கும் நேரத்தில் தீ பேருந்து முழுவதும் பரவியது. இதனைக் கண்ட பொதுமக்கள் பலரும் உடனடியாக ஓடிவந்து தீயை அணைக்க முயன்றுள்ளனர். சிறிது நேரத்தில் அங்கு தீயணைப்பு வீரர்களும், காவல்துறை அதிகாரிகளும் வந்து சேர்ந்தனர்.

எனினும் இந்த தீ விபத்தில் 20 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 16 பேர் கடும் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பேருந்தில் மின்கசிவு ஏற்பட்டதே தீவிபத்துக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்து குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, “ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் ஏற்பட்ட விபத்தில் உயிர் இழப்பு மிகுந்த துயரத்தை ஏற்படுத்துகிறது. இந்த கடினமான நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிவாரணம் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x