Published : 14 Oct 2025 03:29 PM
Last Updated : 14 Oct 2025 03:29 PM
புதுடெல்லி: மேற்கு வங்கத்தில், மருத்துவக் கல்லுாரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நிலையில், இச்சம்பவம் குறித்து அப்பெண் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேற்கு வங்கம், பச்சிம் வர்தமான் மாவட்டத்தில் மருத்துவக் கல்லுாரி மாணவியை கடத்திச் சென்று மர்ம நபர்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வெள்ளிக்கிழமை இரவு இவர், தன் ஆண் நண்பருடன் உணவருந்தி விட்டு, விடுதிக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் , அந்த மாணவியின், 'மொபைல் போனை' பறித்ததுடன், மருத்துவக் கல்லுாரி அருகே உள்ள வனப்பகுதிக்கு மாணவியை இழுத்து சென்று, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடினர்.
இந்நிலையில், பாதிக்கப்பட் ட மாணவியின் நிலையை அறிந்த அவரது நண்பர், உடனே அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். சிகிச்சையின் போது மருத்துவரிடம் பாதிக்கப்பட்ட பெண் அளித்த வாக்குமூலத்தில், “அவர்கள வாகனத்தை விட்டு இறங்கி, எங்களை நோக்கி வருவதை நாங்கள் கவனித்தோம். நாங்கள் காட்டை நோக்கி ஓட ஆரம்பித்தோம். பின்னர் அந்த மூன்று பேரும் எங்களைப் பின்தொடர்ந்து ஓடி வந்து, என்னைப் பிடித்து, காட்டுக்குள் இழுத்துச் சென்றனர்.
அந்த ஆண்கள் எனது போனை எடுத்துக் கொண்டனர். பின்னர், எனது நண்பருக்கு போன் செய்யும்படி என்னை வற்புறுத்தினார்கள். ஆனால் அவர் எனது போனை எடுக்கவில்லை என்பதால் என்னை காட்டுக்குள் இழுத்துச் சென்று துன்புறுத்தினார்கள். நான் கூச்சலிட்டால், மேலும் பல ஆண்களை அழைத்து பாலியல் வன்கொடுமை செய்வோம் என்று என்னை மிரட்டினார்கள்” என்று தெரிவித்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக இதுவரை ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்களில் முன்னாள் கல்லூரி பாதுகாவலர், மருத்துவமனை ஊழியர் உள்ளிட்டோர் அடங்குவர் என்று போலீஸார் தெரிவித்தனர்.
இதனிடையே, பெண்கள் நள்ளிரவில் தனியாக வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி அறிவுறுத்தியது எதிர்க்கட்சிகள் மற்றும் பெண்கள் உரிமை குழுக்களிடமிருந்து கடுமையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை இது குறித்து கூறும்போது, “முதல்வர் மம்தாவும் ஒரு பெண்தான். அவர் எப்படி ஒரு பொறுப்பற்ற விஷயத்தைச் சொல்ல முடியும்? பெண்கள் தங்கள் வேலையை விட்டுவிட்டு வீட்டில் உட்கார வேண்டுமா? என் மகளை மீண்டும் ஒடிசாவுக்கே அழைத்துச் செல்ல விரும்புகிறேன்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT