Last Updated : 14 Oct, 2025 02:10 PM

6  

Published : 14 Oct 2025 02:10 PM
Last Updated : 14 Oct 2025 02:10 PM

“நீங்கள் தலித்தாக இருந்தால்...” - ஐபிஎஸ் அதிகாரி தற்கொலை வழக்கில் ராகுல் காந்தி காட்டம்!

ஐபிஎஸ் அதிகாரி புரன் குமாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறும் ராகுல் காந்தி

சண்டிகர்: உயர் அதிகாரிகளின் நெருக்கடியால் தற்கொலை செய்து கொண்ட ஐபிஎஸ் அதிகாரி புரன் குமாரின் வீட்டுக்குச் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்த வழக்கில் ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனியும், பிரதமர் நரேந்திர மோடியும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், “நீங்கள் எவ்வளவுதான் வெற்றி பெற்றவராக அல்லது திறமையானவராக இருந்தாலும், நீங்கள் தலித்தாக இருந்தால், உங்களை அடக்கலாம், நசுக்கலாம், தூக்கி எறியலாம்.” என்ற மோசமான செய்தியை புரன் குமார் தற்கொலை சம்பவம் கடத்தியுள்ளதாகக் கூறியுள்ளார்.

ஹரியானாவின் மூத்த ஐபிஎஸ் அதிகாரியான புரன் குமார், கடந்த 7-ம் தேதி சண்டிகரில் உள்ள செக்டார் 11 இல்லத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். 2001-ஆம் ஆண்டு பேட்ச் அதிகாரியான அவர், ஏடிஜிபியாக இருந்தார். புரன் குமாரின் மனைவி அம்னீத் பி குமார் ஐஏஎஸ், ஹரியானா அரசின் வெளியுறவு ஒத்துழைப்புத் துறையின் ஆணையர் மற்றும் செயலாளராக உள்ளார்.

பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான புரன் குமார், தற்கொலைக்கான காரணங்களை 8 பக்கங்களுக்கு தட்டச்சு செய்து அதில் கையொப்பமிட்டுள்ளார். கடந்த ஆகஸ்ட் 2020 முதல் ஹரியானாவின் மூத்த அதிகாரிகள் சிலர் தனக்கு எதிராக அப்பட்டமாக சாதிப் பாகுபாட்டைக் காட்டுவதாகவும், மன ரீதியாக துன்புறுத்தல்களை அளிப்பதாகவும், அவர்களால் தனக்கு நேர்ந்த அவமானங்களும், அட்டூழியங்களும் தாங்க முடியாதவை என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளார்.

புரன் குமாரின் மறைவை அடுத்து, அவரது மனைவி அம்னீத் பி குமாருக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கடந்த 11-ம் தேதி கடிதம் எழுதி இருந்தார். அதில், "உங்கள் கணவரும் மூத்த ஐபிஎஸ் அதிகாரியுமான புரன் குமார் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியையும் ஆழ்ந்த வருத்தத்தையும் அளிக்கிறது. இந்தக் கடினமான நேரத்தில் உங்களுக்கும் உங்கள் முழு குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

புரன் குமாரின் மறைவு, அதிகாரத்தில் இருப்பவர்களின் பாரபட்சமான அணுகுமுறை, மூத்த அதிகாரிகளின் சமூக நீதியை இன்றளவும் பறிப்பதாகவே உள்ளது என்பதைக் காட்டுகிறது. நீதிக்கான இந்த பாதையில், நானும் லட்சக்கணக்கான நமது நாட்டு மக்களும் உங்களுடன் நிற்கிறோம்" என தெரிவித்திருந்தார்.

புரன் குமாரின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய ராகுல் காந்தி

இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, சண்டிகரில் உள்ள புரன் குமாரின் இல்லத்துக்குச் சென்று அவரது உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, "புரன் குமாரை தற்கொலைக்குத் தூண்டியவர்கள், அவருக்கு எதிராக செயல்பட்டவர்கள் குறித்து நியாயமான விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவரது குடும்பத்தினருக்கு ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி உறுதியளித்திருந்தார். ஆனால் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. இது, புரன் குமாரின் குடும்பத்தினருக்கு, அவரது குடும்பத்துக்கு அதிக நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது.

புரன் குமாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கும் ராகுல் காந்தி

ஐபிஎஸ் அதிகாரியான புரன் குமார் பல ஆண்டுகளாக அமைப்பு ரீதியிலான பாகுபாட்டை எதிர்கொண்டுள்ளார். ஏராளமான அதிகாரிகள் அவரது வாழ்க்கையை அழிக்கவும், அவரை அவமானப்படுத்தவும் செயல்பட்டு வந்துள்ளனர்.

இது ஒரு குடும்பத்தின் விஷயம் மட்டுமல்ல. இதுபோன்ற சம்பவங்கள் நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான தலித் சகோதர சகோதரிகளுக்கு தவறான செய்தியை அனுப்புகின்றன. நீங்கள் எவ்வளவுதான் வெற்றி பெற்றவராக அல்லது திறமையானவராக இருந்தாலும், நீங்கள் தலித்தாக இருந்தால், உங்களை அடக்கலாம், நசுக்கலாம், தூக்கி எறியலாம் என்பதே அந்த செய்தி. இதை நாங்கள் ஏற்கவில்லை.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக, பிரதமர் மற்றும் ஹரியானா முதல்வருக்கு எனது நேரடி செய்தி என்னவென்றால், புரன் குமாரின் இரண்டு மகள்களுக்கு நீங்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். குற்றமிழைத்த அதிகாரிகள் மீது நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். புரன் குமாரின் குடும்பத்தினருக்கு எதிராக ஏற்படுத்தப்படும் அழுத்தத்தைப் போக்க வேண்டும். இந்த விஷயத்தில் விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். குற்றவாளிகள் மீது வழக்குத் தொடரப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட வேண்டும்" என வலியுறுத்தினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x