

புதுடெல்லி: தீவிரவாதிகளிடமிருந்து பொற்கோயிலை மீட்க ப்ளூ ஸ்டார் ஆபரேஷன் நடத்தியது தவறு என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்த கருத்துக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
இமாச்சல பிரதேச மாநிலம் கசவுலியில் குஷ்வந்த் சிங் இலக்கிய திருவிழா நடைபெற்றது. இதில், ஹரிந்தர் பவேஜா எழுதிய ‘தே வில் ஷூட் யு, மேடம்: மை லைப் த்ரூ கான்ப்ளிக்ட்’ என்ற நூல் பற்றிய விவாதத்தில் கலந்துகொண்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது:
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் உள்ள பொற்கோயிலை தீவிரவாதிகளிடமிருந்து மீட்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட வழி (ப்ளூ ஸ்டார் ஆபரேஷன்) தவறானது. இங்கே ராணுவ அதிகாரிகளை அவமதிக்கும் நோக்கம் எனக்கு இல்லை. சில ஆண்டுகளுக்குப் பிறகு ராணுவத்தின் துணை இல்லாமலேயே பொற்கோயிலை மீட்க நாங்கள் சரியான வழியை காட்டினோம்.
இந்தத் தவறுக்காக முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தனது உயிரை இழக்க வேண்டியிருந்தது. அந்த நடவடிக்கைக்கு ராணுவம், காவல் துறை, புலனாய்வுத் துறை மற்றும் உயர் அதிகாரிகள்தான் காரணம். இந்த விவகாரத்தில் இந்திரா காந்தி மீது குறைகூற முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. ரஷித் ஆல்வி கூறும்போது, “ப.சிதம்பரம் பாஜகவுக்கு எதிராக பேசுவதற்கு பதில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பேசுகிறார். அவரது கருத்து கண்டிக்கத்தக்கது. ப.சிதம்பரம் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக அவர் இப்படி கருத்து தெரிவித்தாரா? இவருக்கு காங்கிரஸ் கட்சி எவ்வளவோ செய்திருக்கிறது. ஆனால் அவர் ஏன் கட்சிக்கு எதிராக பேசுகிறார் என தெரியவில்லை’’ என்றார்.