Last Updated : 12 Oct, 2025 11:39 AM

 

Published : 12 Oct 2025 11:39 AM
Last Updated : 12 Oct 2025 11:39 AM

மேற்கு வங்கத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான மருத்துவக் கல்லூரி மாணவி - மூவர் கைது

பாதிக்கப்பட்ட மணவிக்கு நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் ஒடிசாவைச் சேர்ந்த மாணவி, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எனினும், கைது செய்யப்பட்டவர்களின் விவரங்களை போலீசார் இன்னும் வெளியிடவில்லை. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய போலீஸ் அதிகாரி ஒருவர், "இந்த வழக்கில் தொடர்புடைய மூன்று பேரை நாங்கள் கைது செய்துள்ளோம். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இது மிகவும் உணர்ச்சிகரமான வழக்கு. கூடுதல் தகவல்களை நாங்கள் பின்னர் தெரிவிப்போம்" என கூறினார்.

ஒடிசாவின் ஜலேஸ்வர் பகுதியைச் சேர்ந்த மாணவி, மேற்கு வங்கத்தின் பஸ்சிம் பர்தமான் மாவட்டத்தின் துர்காபூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். இவர், நேற்று முன்தினம் (அக். 10) இரவு உணவு உட்கொள்வதற்காக, மருத்துவக் கல்லூரி வளாகத்துக்கு வெளியே தனது நண்பர் ஒருவருடன் சென்றுள்ளார். அப்போது மூன்று பேரும் சேர்ந்து மிரட்டியதில் உடன் வந்த நண்பர் மாணவியை விட்டுவிட்டு ஓடியுள்ளார். இதையடுத்து, அந்த மாணவியை ஒதுக்குப்புறம்பான இடத்துக்கு அழைத்துச் சென்ற அவர்கள், அவரை கூட்டு பாலயல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய காவல் துறை அதிகாரி, "மருத்துவக் கல்லூரி மாணவி வெள்ளிக்கிழமை (அக்.10) இரவு 8 - 8.30 மணியளவில் தனது நண்பருடன் வெளியே சென்றது ஆரம்ப விசாரணையில் தெரிய வந்துள்ளது. அடையாளம் தெரியாத மூன்று ஆண்கள் அங்கு வந்தபோது உடன் வந்த நண்பர், மாணவியை தனியாக விட்டுவிட்டுச் சென்றுள்ளார். அந்த நபர்கள், மாணவியின் தொலைபேசியைப் பறித்துக் கொண்டு வளாகத்துக்கு வெளியே உள்ள ஒரு காட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து யாரிடமாவது சொன்னால் மோசமான விளைவுகள் ஏற்படும் என மிரட்டி உள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவியின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவியுடன் உடன் சென்ற அவரது நண்பரிடமும் பேசினோம்" என தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் அர்ச்சனா மஜும்தார், "மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற வழக்குகளில் காவல் துறை எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுப்பதில்லை. இது மிகவும் துரதிருஷ்டவசமானது. இதுபோன்ற குற்றங்கள் அதிகரிப்பதைத் தடுக்க முதல்வர் மம்தா பானர்ஜி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x