

புதுடெல்லி: ‘‘இந்தியாவை நெருங்கிய நட்பு நாடாக ஆப்கானிஸ்தான் பார்க்கிறது’’ என இந்தியா வந்துள்ள ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அமிர் கான் முட்டாகி தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் இருந்த அமெரிக்க தலைமையிலான நேட்டோ படை கடந்த 2021-ம் ஆண்டு வெளியேறியது. அதன்பின் அங்கு ஆட்சியை தலிபான்கள் கைப்பற்றினர். இதனால் காபூலில் செயல்பட்டு வந்த தூதரகத்தை இந்தியா மூடியது. ஒராண்டு கழித்து வர்த்தகம், மருத்துவ உதவி மற்றும் மனிதாபிமான உதவிகளை அளிப்பதற்காக மட்டும் சிறு அலுவலகத்தை காபூலில் இந்தியா திறந்தது. சீனா, ரஷ்யா, ஈரான், பாகிஸ்தான் மற்றும் துருக்கி உட்பட சுமார் 1 டஜன் நாடுகள் மட்டுமே ஆப்கானிஸ்தானில் தூதரகத்தை வைத்துள்ளன.
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அமிர் கான் முட்டாகி, இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரிமை துபாயில் கடந்த ஜனவரி மாதம் சந்தித்து பேசினார். அதன் பின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடமும் முட்டாகி போனில் பேசினார். இரு நாடுகள் இடையே அரசியல் மற்றும் வர்த்தக உறவுகள் குறித்து ஆலோசிப்பதற்காக இந்தியா சார்பில் சிறப்பு தூதர் கடந்த ஏப்ரல் மாதம் காபூல் சென்றார்.
இதையடுத்து ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அமிர் கான் முட்டாகி 6 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். அவர் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை டெல்லியில் நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது முட்டாகி கூறியதாவது:
ஆப்கானிஸ்தானில் சமீபத்தில் பூகம்பம் ஏற்பட்டபோது, முதலில் உதவிய நாடு இந்தியா. இந்தியாவை நெருங்கிய நட்பு நாடாக ஆப்கானிஸ்தான் பார்க்கிறது. பரஸ்பர மரியாதை அடிப்படையில் இந்தியாவுடன் வர்த்தக உறவை மற்றும் மக்கள் இடையேயான உறவை மேம்படுத்த நாங்கள் விரும்புகிறோம். இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்த தூதரக உறவை ஏற்படுத்தவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். நான் இந்தியாவில் இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இரு நாடுகள் இடையேயான செயல்பாடுகள் அதிகரிக்க வேண்டும். எங்கள் நாட்டை எந்த குழுவும், மற்ற நாடுகளுக்கு எதிராக பயன்படுத்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சர் ஜெய்சங்கர் கூறுகையில், ‘‘ஆப்கன் தலைநகர் காபூலில் 4 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட தூதரகத்தை இந்தியா மீண்டும் திறக்கும். இது இரு நாடுகள் இடையேயான தூதரக உறவுகள் மேம்படுவதில் முக்கியமான நடவடிக்கை’’ என்றார்.