

புதுடெல்லி: கனமழை மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு மாவட்ட மறுசீரமைப்புக்காக தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ. 2,221 கோடியை விரைவாக விடுவிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்தினார்.
பிரதமருடனான சந்திப்புக்குப் பிறகு டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பினராயி விஜயன், "பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து கனமழை மற்றும் நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்ட வயநாடு மாவட்டத்தில் மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து முழு தொகையான ரூ.2,221.03 கோடியை அவசரமாக விடுவிக்க கேட்டுக்கொண்டேன். இதை கடனாக அல்லாமல், மானியமாக வழங்க வேண்டும் என கோரினேன். மேலும், கோழிக்கோடு அருகே கினலூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான ஒப்புதலை உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தேன்.
கேரளாவின் நிதிச் சிக்கல் குறித்தும் பிரதமரிடம் எடுத்துரைத்தேன். மாநிலத்தின் கடன் வரம்பைக் குறைப்பதற்கான மத்திய அரசின் முடிவு, உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான நிதியைத் திரட்டுவதில் சிக்கலை ஏற்படுத்தி இருப்பதைத் தெரிவித்தேன். கேரளாவின் கடன் வரம்பை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.5% ஆக நிர்ணயிக்குமாறு கோரிக்கை விடுத்தேன். தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுக்காக நிலம் கையகப்படுத்தும் செலவில் 25%-ஐ ஏற்க வேண்டும் என்பதில் இருந்து கேரளாவுக்கு விலக்கு அளிக்க கோரியுள்ளேன்.
இந்தச் சந்திப்பு நேர்மறையானதாக, ஆரோக்கியமானதாக, நம்பிக்கை அளிக்கக் கூடியதாக இருந்தது. தேசிய வளர்ச்சி மற்றும் பொது நலனுக்காக மத்திய - மாநில அரசுகள் தொடர்ந்து தொடர்பில் இருக்கும். இந்த உறவில் ஏற்றத் தாழ்வுகள் இருக்கலாம். ஆனால், உறவு வெளிப்படையானதாகவும் வலுவானதாகவும் இருக்கும். ஒரு கட்சி மற்றொன்றை ஒதுக்கிவைப்பது என்ற கேள்விக்கே இடமில்லை. கேரளா தனது தேவைகளை மத்திய அரசிடம் தொடர்ந்து தெரிவிக்கும். அது ஒருபோதும் நம்பிக்கையை இழக்காது" என தெரிவித்தார்.