

புதுடெல்லி: மனநலம் ஆரோக்கியம்தான் நமது ஒட்டுமொத்த நலவாழ்வின் அடிப்படையானது என்று தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, உலக மனநல தினத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.
உலக மனநல தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ மனநல ஆரோக்கியம் நமது ஒட்டுமொத்த நல்வாழ்வின் அடிப்படையான பகுதியாகும் என்பதை உலக மனநல தினம் நமக்கு நினைவூட்டுகிறது. வேகமான உலகில், இந்த நாள் மற்றவர்களிடம் கருணையை வெளிப்படுத்துவதன் முக்கியத்துவத்தை நமக்கு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
மனநலம் பற்றிய உரையாடல்கள் மிகவும் பிரதான நீரோட்டமாக மாறும் சூழல்களை உருவாக்க நாம் கூட்டாக உழைப்போம். இந்தத் துறையில் பணியாற்றி மற்றவர்கள் குணமடைந்து மகிழ்ச்சியைக் காண உதவுபவர்களுக்கு எனது பாராட்டுக்கள்’ என்று தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 10 ஆம் தேதி ஆண்டுதோறும் உலக மனநல தினமாக அனுசரிக்கப்படுகிறது. உலக மனநல கூட்டமைப்பின் (WFMH) முன்முயற்சியால் 1992 ஆம் ஆண்டு முதல் உலக சுகாதார அமைப்பினால் உலக மனநல தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.