Last Updated : 17 Aug, 2018 01:50 PM

 

Published : 17 Aug 2018 01:50 PM
Last Updated : 17 Aug 2018 01:50 PM

உயிர்த் தியாகம் செய்த மனைவி; முதல்மாத ஊதியத்தைக் கொடுத்த கணவர்: கேரளாவில் நெகிழ்ச்சி சம்பவம்

கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சலுக்கு நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்தபோது, உயிரிழந்த நர்ஸ் லினியின் கணவர் தனது முதல் மாத ஊதியத்தை வெள்ளத்தால், பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணத்துக்கு வழங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

நர்ஸ் லினி மக்களுக்காக உயிரைக் கொடுத்தார், அவரால் வேலைவாய்ப்பு பெற்ற அவரின் கணவர் சஜேஸ் புதூர், தனது முதல்மாத ஊதியத்தை அளித்திருக்கிறார்.

கேரள மாநிலத்தில், கடந்த மே, ஜூன் மாதம் மலப்பரம், கோழிக்கோடு மாவட்டங்களில் வவ்வால்கள் மூலம் நபா வைரஸ் காய்ச்சல் பரவியது. இதற்கு 17 பேர் வரை உயிரிழந்தனர். இந்த நிபா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சிகிச்சை அளிக்கும் பணியில் லினி என்ற செவிலியர் ஈடுபட்டு இருந்தார்.

இரவுபகல் பாராமல் பெரம்பரா நகர மருத்துவமனையில் தங்கி சேவை செய்த லினிக்கு நிபா வைரஸ் காய்ச்சல் தொற்று ஏற்பட்டது. அதன்பின் லினிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபாக உயிரிழந்தார். லினிக்கு சஜேஸ் புதூர்(வயது36) என்ற கணவரும், இரு குழந்தைகளும் இருக்கின்றனர்.

இந்நிலையில், லினி இறந்தபின், கருணை அடிப்படையில் அவரின் கணவர் சஜேஸ்க்கு கேரள அரசு சார்பில் பணி வழங்கப்பட்டது.

இதில் நிபா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தனியறையில் சிகிச்சைக் அளிக்கப்பட்டபோது, அவரின் கணவர் சஜேஸ் அரபுநாடான பஹ்ரைனில் பணியில் இருந்தார். தனது மனைவிக்கு நேர்ந்த நிலைமை குறித்து அறிந்த சஜேஸ் அதன்பின் கேரளா திரும்பினார்.

ஆனால், லினாவுக்கு ஏற்பட்ட வைரஸ் காய்ச்சல் தொற்று வேறுயாருக்கும் பரவிவிடக்கூடாது என்பதற்காக அவர் உயிரோடு இருக்கும் வரை அவரின் கணவர் சஜேஸ், இரு குழந்தைகளையும் பார்ப்பதற்கு மருத்துவமனை நிர்வாகம் அனுமதியளிக்கவில்லை. தனது கணவரையும், குழந்தைகளையும் பார்க்காமலே கடைசியில் லினி உயிர் பிரிந்தது.

மாநிலத்தின் நலனுக்காக லினி பணியாற்றி உயிரிழந்த சம்பவத்தையடுத்து, பல்வேறு இடங்களில் இருந்து அவர்களின் குடும்பத்துக்கு உதவி குவிந்தது. வெளிநாட்டில் வசிக்கும் மலையாள மக்களும் உதவிக்கரம் நீட்டினார்கள்.

இந்நிலையில், தனது இரு குழந்தைகளையும் கவனித்துக்கொள்ளும் பொருட்டு, சஜேஸ் கேரளாவிலேயே வசிக்கும் நிலை ஏற்பட்டது. இதை அறிந்த கேரள அரசு, பெரம்பரா அருகே கூத்தாலி சுகாதார மையத்தில் கிளார்க் பணியை சஜேஸ்க்கு கடந்த மாதம் வழங்கியது.

கடந்த மாதம் பணியில் சேர்ந்த சஜேஸ்க்கு முதல்மாத ஊதியம் இம்மாதம் கிடைத்தது. ஆனால், மாநிலத்தில் வெள்ளம் சூழ்ந்து மக்கள் சிரமப்பட்டு வரும் நிலையில், தனது முதல்மாத ஊதியமான ரூ.25 ஆயிரத்து 200 ரூபாயை முதல்வர் நிவாரண நிதிக்காக அளித்துவிட்டார்.

இது குறித்து சஜேஸ் புதூர் தி இந்து(ஆங்கிலம்) அளித்த பேட்டியில் கூறியதாவது:

இப்போது என் மாநிலம் இருக்கும் சூழலில் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டியது எனது கடமையாகும். அதனால் எனது முதல்மாத ஊதியம் முழுவதையும் முதல்வர் வெள்ள நிவாரண நிதிக்காக அளித்துவிட்டேன். என்னையும், எனது குடும்பத்தையும் கவனித்துக்கொள்ளக் கேரள அரசும், மக்களும் இருக்கிறார்கள்.

என்னுடைய மனைவி லினி தனது வாழ்க்கையையும். உயிரையும் நர்ஸ் பணிக்காக தியாகம் செய்தார். அவரை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். அவரின் தியாகத்தால் எனக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. எனக்கு இந்த வேலையை அளித்த கேரள அரசுக்கும், ஆதரவு அளித்த மக்களுக்கும் எப்போதும் விசுவாசமாக இருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x