Published : 28 Aug 2018 05:13 PM
Last Updated : 28 Aug 2018 05:13 PM

கேரள வெள்ளம்: பாட்டு பாடி நிதி திரட்டிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள்

கேரளா வெள்ளத்துக்கு நிவாரணம் திரட்டும் பொருட்டு டெல்லியில் நடத்தப்பட்ட கலை நிகழ்ச்சியில் கேரளத்தைச் சேர்ந்த குரியன் ஜோசப், கே.எம்.ஜோசப் ஆகிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பாட்டு பாடி நிதி திரட்டினர்.

இந்நிகழ்ச்சி உச்ச நீதிமன்ற வளாகத்துக்கு எதிர்ப்புறம் அமைந்துள்ள கட்டிடத்தில் நடைபெற்றது. இதில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, பிற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் கலந்துகொண்டனர்.

நீதிபதி கே.எம்.ஜோசப், பிரபல மலையாள திரைப்படமான ‘அமரம்’ படத்தில் இருந்து மீனவரின் வாழ்க்கையைச் சொல்லும் பாடலைப் பாடினார். அப்போது பேசிய அவர், ‘’வெள்ளம் உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்களின்போது முதலில் பாதிக்கப்படுவது அவர்கள்தான். இந்தப் பாடலை அவர்களுக்காக அர்ப்பணிக்கிறேன்’’ என்றார்.

நீதிபதி குரியன் ஜோசப், பிரபல பின்னணிப் பாடகர் மோஹித் சவுகானுடன் இணைந்து பாடினார்.

நிகழ்ச்சியில் பேசிய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ‘’கலை நிகழ்ச்சிகள் இருப்பதால் சிலர் இதைக் கொண்டாட்டமாகக் கருதலாம். ஆனால் இது நிவாரணத்துக்கு நிதி திரட்டுவதற்காக மேற்கொள்ளப்படும் ஒருங்கிணைந்த முயற்சி’’ என்றார்.

நீதிபதிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியின் மூலம் ரூ.10 லட்சத்துக்கும் மேற்பட்ட தொகை திரட்டப்பட்டுள்ளது.

முன்னதாக, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தலா ரூ.25,000 பணத்தை கேரள முதல்வர் பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்கினர். உச்ச நீதிமன்ற அலுவலர்கள் கேரள மக்களுக்கு தங்களின் ஒரு நாள் ஊதியத்தை வழங்கினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x