நிலச்சரிவு நடந்த பகுதிக்கு ஜிப்லைனில் சென்ற டாக்டர்

நிலச்சரிவு நடந்த பகுதிக்கு ஜிப்லைனில் சென்ற டாக்டர்

Published on

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த வாரம் கனமழை பெய்து பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் 28-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் டார்ஜிலிங்கின் பாமன்தங்கா பகுதியில் நிலச்சரிவில் சிக்கிக் கொண்ட சிலர் வெளியே வர முடியாமல் தவித்தனர். அவர்களுக்கு உதவுவதற்காக நக்ரகட்டா பகுதியைச் சேர்ந்த அரசு மருத்துவர் இர்பான் மோல்லா சென்றார். அப்போது பாதிக்கப்பட்ட மக்கள் நீர் சூழ்ந்த பகுதியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தனர். இதனால் இர்பான் மோல்லாவால் அங்கு செல்ல முடியவில்லை.

இந்நிலையில் அவர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக கயிறு கட்டி ஜிப்லைன் போன்று அமைத்து அங்கு சென்றடைந்தார். பின்னர் அங்கு காயமடைந்திருந்த மக்களுக்கு மருத்துவம் செய்தார். இதை வீடியோவாக எடுத்த சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தனது உயிரை துச்சமென மதித்து வெள்ளம் சூழ்ந்த பகுதியில், கயிறு கட்டி சென்று மருத்துவம் பார்த்த இர்பானுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in