பிஹாரிகள் வெளியேறியதற்கு காரணமே காங். - ஆர்ஜேடி ஆட்சிதான்: பிரதமர் மோடி

பிஹாரிகள் வெளியேறியதற்கு காரணமே காங். - ஆர்ஜேடி ஆட்சிதான்: பிரதமர் மோடி
Updated on
2 min read

புதுடெல்லி: பிஹார் மக்களில் பலர் தங்கள் மாநிலத்தைவிட்டு வெளியேறியதற்கு உண்மையான காரணம், காங்கிரஸ் - ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆட்சிகள்தான் என பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

டெல்லியில் விஞ்ஞான் பவனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, “பிஹாரின் கல்வி முறையை காங்கிரஸும், ராஷ்ட்ரிய ஜனதா தளமும் சீரழித்தன. 25 ஆண்டுகளுக்கு முன்பு பிஹாரில் கல்வி முறை எவ்வாறு சீரழிந்து கிடந்தது என்பது இன்றைய தலைமுறைக்கு தெரியாமல் இருக்கலாம். (புதிதாக) பள்ளிகள் திறக்கப்படவில்லை, ஆட்சேர்ப்பும் நடைபெறவில்லை. பிஹாரிலேயே தங்கள் குழந்தை படித்து முன்னேறுவதை எந்த பெற்றோர்தான் விரும்ப மாட்டார்கள்?

ஆனால், கட்டாயம் காரணமாகவே, பல லட்சம் பேர் பிஹாரை விட்டு வெளியேறினார்கள். பிஹாரில் இருந்து வாரணாசிக்கும், டெல்லிக்கும், மும்பைக்கும் பல லட்சம் குழந்தைகள் இடம் பெயர்ந்தன. இடப்பெயர்வின் உண்மையான தொடக்கம் இதுதான்.

அதிர்ஷ்டவசமாக, பிஹார் மக்கள் அரசாங்கப் பொறுப்பை நிதிஷ் குமாரிடம் ஒப்படைத்தார்கள். மேலும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒட்டுமொத்தக் குழுவும் எவ்வாறு ஒன்றிணைந்து சீரழிந்து கொண்டிருந்த கல்வி அமைப்பை மீண்டும் சரியான பாதைக்குக் கொண்டு வந்தன என்பதற்கு நாம் அனைவரும் சாட்சிகள்.

கடந்த 20 ஆண்டுகளில், பிஹார் அரசு மாநிலத்தில் 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அளித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில் மட்டும், சுமார் 10 லட்சம் இளைஞர்கள் அரசு வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர். பிஹார் இளைஞர்களின் திறனை மேலும் மேம்படுத்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது.

ஆர்ஜேடி - காங்கிரஸ் ஆட்சியுடன் ஒப்பிடும்போது, பிஹாரின் கல்வி பட்ஜெட் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று பிஹாரின் ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு பள்ளி உள்ளது. பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது. பிஹாரில் விளையாட்டு தொடர்பான சர்வதேச உள்கட்டமைப்பு இல்லாத காலம் ஒன்று உண்டு. ஆனால், தற்போது பிஹாரில் தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.” என தெரிவித்தார்.

முன்னதாக, பிரதமர் மோடி ரூ.60,000 கோடி முதலீட்டில் மத்திய நிதியுதவி பெறும் திட்டமான பிஎம்-சேது (மேம்படுத்தப்பட்ட ஐடிஐகள் மூலம் பிரதமரின் திறன் அளித்தல் மற்றும் வேலைவாய்ப்பில் மாற்றம் செய்தல்) திட்டத்தைத் தொடங்கி வைத்தார். மேலும், 34 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 400 நவோதயா வித்யாலயாக்கள் மற்றும் 200 ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிகளில் நிறுவப்பட்டுள்ள 1,200 தொழில் திறன் ஆய்வகங்களை பிரதமர் திறந்து வைத்தார்.

ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஐந்து லட்சம் பட்டதாரி இளைஞர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு தலா ரூ.1,000 மாதாந்தர உதவித்தொகை பெறும், முதல்வரின் சுய உதவித்தொகை உறுதித் திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, பிஹார் மாணவர் கடன் அட்டைத் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.

அதோடு, உலக அளவில் போட்டித்தன்மை வாய்ந்த பணியாளர்களை உருவாக்குவதற்காக தொழில் சார்ந்த படிப்புகள் மற்றும் தொழிற்கல்வியை வழங்க பிஹாரில் ஜன் நாயக் கற்பூரி தாக்கூர் திறன் பல்கலைக்கழகத்தை தொடங்கிவைத்த பிரதமர் நரேந்திர மோடி, பிஹாரின் நான்கு பல்கலைக்கழகங்களில் புதிய கல்வி மற்றும் ஆராய்ச்சி வசதிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in