இந்தியா - சீனா இடையே மீண்டும் நேரடி விமான சேவை: அக்.26 முதல் தொடக்கம்!

இந்தியா - சீனா இடையே மீண்டும் நேரடி விமான சேவை: அக்.26 முதல் தொடக்கம்!
Updated on
1 min read

இந்தியா சீனா இடையிலான நேரடி விமான சேவை வரும் அக்டோபர் 26 முதல் மீண்டும் தொடங்க உள்ளது.

சில தினங்களுக்கு முன்பு சீனா​வின் தியான்​ஜினில் நடந்த ஷாங்​காய் ஒத்​துழைப்பு மாநாட்​டின்​போது சீன அதிபர் ஜி ஜின்​பிங்கை சந்​தித்த பிரதமர் நரேந்​திர மோடி இந்தியா சீனா இடையே நேரடி விமான சேவை விரைவில் தொடங்கும் என்று அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், இரு நாடுகளின் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகளுக்கு இடையேயான தொடர் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, இந்த மாத இறுதிக்குள் நேரடி விமான சேவைகளை மீண்டும் தொடங்க இந்தியாவும் சீனாவும் ஒப்புக் கொண்டுள்ளன. இரு தரப்பு விமானப் போக்குவரத்து அதிகாரிகளுக்கும் இடையிலான இந்த பேச்சுவார்த்தைகள் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து நடந்து வந்தன.

நேரடி விமான சேவையை மீண்டும் அமல்படுத்துவது மற்றும் திருத்தப்பட்ட விமான சேவை ஒப்பந்தத்தை இறுதி செய்வது குறித்து இதில் பேசப்பட்டன. இந்த அறிவிப்பை தொடர்ந்து, இண்டிகோ நிறுவனம், வரும் அக்டோபர் 26 முதல் கொல்கத்தாவிலிருந்து குவாங்சோவிற்கு தினமும், இடைவிடாத விமான சேவையை மீண்டும் தொடங்குவதாக அறிவித்துள்ளது. விரைவில் டெல்லிக்கும் குவாங்சோவிற்கும் இடையே நேரடி விமானங்களை இண்டிகோ அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் மற்றும் எல்லை பிரச்சினை காரணமாக இந்தியா - சீனா இடையிலான நேரடி விமான சேவை ரத்து செய்யப்பட்ட நிலையில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் நேரடி விமான சேவை தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது,

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in