4 தென் அமெரிக்க நாடுகளுக்கு ராகுல் காந்தி பயணம்

4 தென் அமெரிக்க நாடுகளுக்கு ராகுல் காந்தி பயணம்

Published on

புதுடெல்லி: நான்கு தென் அமெரிக்க நாடுகளுக்கு ராகுல் காந்தி பயணம் மேற்கொண்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் ஊடக மற்றும் விளம்பரத்துறை பொறுப்பாளர் பவன் கெரா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தென் அமெரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். நான்கு நாடுகளில் உள்ள அரசியல் தலைவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், தொழிலதிபர்கள் ஆகியோருடன் அவர் கலந்துரையாட திட்டமிடப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேசில் மற்றும் கொலம்பியாவுக்கு ராகுல் காந்தி செல்வார் என்றும் அங்கு பல்கலைக்கழக மாணவர்களுடன் அவர் கலந்துரையாடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அடுத்த தலைமுறை உலகத் தலைவர்களுடன் அவர் கலந்துரையாடுவார் என்றும் கூறப்படுகிறது. நாடுகளின் அதிபர்கள் மற்றும் மூத்த தலைவர்களை ராகுல் காந்தி சந்திப்பார் என்றும் ஜனநாயக மற்றும் மூலோபாய உறவுகளை வலுப்படுத்துவார் என்றும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் வரி உயர்வுக்குப் பிறகு இந்தியா தனது வணிகத்தை பரவலாக்க திட்டமிட்டு செயல்பட்டு வரும் நிலையில், அதை வலுப்படுத்தும் நோக்கில் தொழிலதிபர்களைச் சந்தித்து இந்தியாவில் முதலீட்டு வாய்ப்புகளை ஆராய அவர் அழைப்பு விடுப்பார் என்றும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

அணிசேரா இயக்கம், உலகளாவிய தெற்கின் ஒற்றுமை மற்றும் பல நாடுகளுடனான இந்தியாவின் நீண்ட கால உறவு ஆகியவற்றின் அடிப்படையில், ராகுல் காந்தியின் தென் அமெரிக்கப் பயணம் வரலாற்றுச் சிறப்புமிக்கது என காங்கிரஸ் தெரிவித்துள்ளது. ராகுல் காந்தியின் இந்த பயணம் இந்த மரபை தொடரச் செய்யும் என்றும், வர்த்தகம், தொழில்நுட்பம் மற்றும் மக்கள் தொடர்பு ஆகியவற்றுக்கான புதிய வழிகளை திறக்கும் என்றும் காங்கிரஸ் கூறியுள்ளது.

சர்வதேச கூட்டாண்மைகளை வடிவமைப்பதிலும், இந்தியாவின் உலகளாவிய இருப்பை முன்னேற்றுவதிலும் இந்தியாவின் ஜனநாயக எதிர்க்கட்சியின் அத்தியாவசியப் பங்கை இது அடிக்கோடிட்டு காட்டுகிறது என்றும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in