மாநில அந்தஸ்து கோரி லடாக்கில் போராட்டம்: 4 பேர் உயிரிழப்பு, 50+ காயம் - வன்முறையால் பதற்றம்

மாநில அந்தஸ்து கோரி லடாக்கில் போராட்டம்: 4 பேர் உயிரிழப்பு, 50+ காயம் - வன்முறையால் பதற்றம்
Updated on
1 min read

லே: யூனியன் பிரதேசமான லடாக்-குக்கு மாநில அந்தஸ்து கோரி தலைநகர் லே-யில் நடைபெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 4 பேர் உயிரிழந்தனர், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

மாநில அந்தஸ்து, ஆறாவது அட்டவணை அந்தஸ்து உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து லடாக்கில் உள்ள லே உச்ச அமைப்பு (Leh Apex Body-LAB), கடந்த 10-ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக் உள்ளிட்ட 15 பேர் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், சோனம் வாங்சுக் உள்ளிட்ட இருவரின் உடல்நிலை மோசமானதை அடுத்து அவர்கள் இருவரும் நேற்று (செப். 23) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது அவர்களின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனிடையே, தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி எல்ஏபி அமைப்பினர் இன்று கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர். மேலும், லே நகரில் உள்ள பாஜக அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தை அடுத்து அங்கு போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். அப்போது, போராட்டக்காரர்களில் ஒரு பிரிவினர் வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. பாஜக அலுவலகத்தின் மீதும், போலீஸார் மீதும் கற்களை வீசிய போராட்டக்காரர்கள், அங்கிருந்த காவல் துறை வாகனத்துக்கும் தீ வைத்தனர்.

இதையடுத்து, தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் போலீஸார் போராட்டக்காரர்களைக் கலைக்க முயன்றனர். இதில், 4 பேர் உயிரிழந்தனர்.. 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக, அனைவரும் அமைதி காக்குமாறு சோனம் வாங்சுக் வேண்டுகோள் விடுத்துள்ளார். லடாக்கில் சமீப ஆண்டுகளில் இப்படி ஒரு வன்முறை ஏற்பட்டது இதுவே முதல்முறை என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, நாளை முழு அடைப்பு போராட்டத்துக்கு கார்கிலின் சமூக - அரசியல் - மத குழுக்களின் கூட்டமைப்பான கார்கில் ஜனநாயகக் கூட்டணி (கேடிஏ) அழைப்பு விடுத்துள்ளது. உண்ணாவிரதப் போராட்டத்தை அடுத்து, கோரிக்கைகள் தொடர்பாக எல்ஏபி மற்றும் கேடிஏ உடன் லடாக் தொடர்பான உயர் அதிகாரக் குழு அக்டோபர் 6-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் சமீபத்தில் அறிவித்தது.

இந்த அறிவிப்பை சோனம் வாங்சுக் உள்ளிட்ட போராட்டக்காரர்கள் ஏற்க மறுத்தனர். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள லடாக்கின் கோரிக்கைகள் தொடர்பாக ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தையை மத்திய அரசு உடனடியாக தொடங்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சில் தேர்தல்கள் அடுத்த மாதம் நடைபெற உள்ளன. இந்நிலையில், இந்தப் போராட்டம் லடாக்கில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2020-ல் நடந்த லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சில் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. ஜம்மு காஷ்மீரில் இருந்து 2019-ல் பிரிக்கப்பட்ட லடாக் அதுமுதல் யூனியன் பிரதேசமாக இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in