குஜராத்தில் பானிபூரி கேட்டு பெண் தர்ணா: போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதி

குஜராத்தில் பானிபூரி கேட்டு பெண் தர்ணா: போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதி
Updated on
1 min read

வதோதரா: குஜராத் மாநிலம் வதோதராவில் பானிபூரி கேட்டு அடம்பிடித்து நடுரோட்டில் அமர்ந்து பெண் தர்ணாவில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பல மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஊர்வலம், அரசியல் பேரணி, அவ்வப்போது பெய்யும் கனமழை காரணமாக போக்குவரத்து தடைபடுவது வாடிக்கை. ஆனால், குஜராத்தில் பெண் ஒருவர் பானிபூரி தரக்கோரி நடுரோட்டில் தர்ணா செய்த விநோத சம்பவம் நடந்தேறியுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் கூற்றுப்படி, ரூ.20 கொடுத்து கடைக்காரரிடம் பானிபூரி கேட்டுள்ளார். அந்தப் பெண் எதிர்பார்த்ததோ ஆறு. ஆனால், கடைக்காரர் கொடுத்ததோ நான்கு.. இதனால் ஏமாற்றம் அடைந்த அந்தப் பெண் இரண்டு பானிபூரிக்கு நீதி கேட்டு நடுரோட்டில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட ஆரம்பித்துவிட்டார்.

இதனால் அப்பகுதி முழுவதும் வாகன நெரிசல் ஏற்பட்டதையடுத்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக் கப்பட்டது. விரைந்து வந்த போலீஸார் போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டபோது போராட்டத்தில் ஈடுபட்ட பெண் தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் கண்ணீர்மல்க முறையிட்டார்.

ரூ.20-க்கு ஆறு பானிபூரிகளை வாங்கித் தந்து நீதியை நிலைநாட்டுமாறு அவர்களிடம் கோரிக்கை விடுத்தார். இதனை கண்டுகொள்ளாத அதிகாரிகள் அவரை அப்புறப்படுத்திவிட்டு முடங்கிய போக்குவரத்தை சரிசெய்வதில்தான் அதிக அக்கறை காட்டினர். இதனால், அந்தப் பெண் மிஸ் செய்த 2 பானி பூரிக்கு விடைகிடைத்ததா என்பது மட்டும் இன்னும் தெரியவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in