உ.பி.யில் கோயில் கட்டுமானப் பணியின் போது ஆங்கிலேய ஆட்சிக் கால வெள்ளி நாணயங்கள் கண்டெடுப்பு

உ.பி.யில் கோயில் கட்டுமானப் பணியின் போது ஆங்கிலேய ஆட்சிக் கால வெள்ளி நாணயங்கள் கண்டெடுப்பு
Updated on
1 min read

பாரபங்கி: உத்தரப் பிரதேசத்தின் பாரபங்கி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ லோதேஷ்வர் மகாதேவ தாம் கோயில் கட்டுமானப் பணிகளின் போது, ​​1882-ம் ஆண்டு வாக்கிலான ஆங்கிலேய ஆட்சிக் காலத்தை சேர்ந்த 75 வெள்ளி நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டது.

பாரபங்கி கோயில் ஸ்ரீ லோதேஷ்வர் மகாதேவ தாம் கோயில் நடைபாதை கட்டுமானத்திற்காக அஸ்திவாரம் தோண்டியபோது, ஆங்கிலேய ஆட்சிக் கால நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. கட்டுமான தொழிலாளர்கள் 100-க்கும் மேற்பட்ட வெள்ளி நாணயங்கள் இருந்த ஒரு களிமண் பானையை முதலில் கண்டுபிடித்துள்ளனர். உடனடியான அவர்கள் அந்த நாணயங்களை தங்களுக்குள் பிரித்து எடுத்துக் கொண்டனர். இதனையடுத்து உள்ளூர்வாசிகள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இந்த நாணயங்களைக் கைப்பற்றியது. இதுவரை 75 நாணயங்கள் மீட்கப்பட்டுள்ளன என்றும், மீதமுள்ளவற்றை கண்டுபிடிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுபற்றி பேசிய இணை நீதிபதி குஜிதா அகர்வால், “இந்த நாணயங்கள் ஆங்கிலேய ஆட்சிக் காலத்தை சேர்ந்தவை என்று தெரிகிறது. இதுவரை 75 நாணயங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தொல்பொருள் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, தொல்லியல் குழு இந்தக் கோயிலில் விரிவான விசாரணையை மேற்கொண்டு வருகிறது.” என்றார்

ஆங்கிலேய ஆட்சிக் கால நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதிக்குள் மக்கள் நுழைய இப்போது தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நாணயங்கள் சுமார் 140 ஆண்டுகள் பழமையானவை என்றும், இது ஒரு முக்கியமான வரலாற்று ஆவணம் என்றும் தொல்லியல் நிபுணர்கள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in