

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் இயற்கை பேரிடரால் சேதமான சாலைகள் விரைந்து சீரமைக்கப்படாத கராணத்தால் போக்குவரத்து முடங்கியுள்ளது. இதனால், ஆயிரக்கணக்கான டன் ஆப்பிள்கள் குறித்த நேரத்துக்கு அனுப்ப முடியாமல் தேக்கமடைந்து அழுகி வருவது விவசாயிகளையும், வர்த்தகர்களையும் வேதனை அடைய செய்துள்ளது.
கடந்த மாதம் கனமழை மற்றும் மேகவெடிப்பு காரணமாக ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலை கடுமையாக சேதமடைந்துள்ளது. ஏறக்குறைய 300 மீட்டர் நீளத்துக்கு சாலைகள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளது. மேலும் ஆங்காங்கே பெரிய பனிப்பாறை சரிவுகளும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக செனானி-உதம்பூர், நஷ்ரி-பனிஹால் நெடுஞ்சாலைகளில் பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது.
இதனால் போக்குவரத்து முடங்கி ஏராளமான கன்டெய்னர் லாரிகள் நாள் கணக்கில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 20 நாட்களாக சாலைகள் சரிசெய்யப்படாததால் கன்டெய்னர்களில் உள்ள ஆப்பிள்கள் அழுகும் நிலைக்கு ஆளாகியுள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் ஆப்பிள் வர்த்தகர்களுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அழுகிய ஆப்பிள்களை பெட்டி பெட்டியாக சாலைகளில் வீசி எறியும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. காஷ்மீரில் சாதாரண விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்கு இது பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் 80 சதவீத ஆப்பிள்கள் காஷ்மீரிலிருந்து உற்பத்தி செய்யப்படும் நிலையில் நெடுஞ்சாலை நாள் கணக்கில் மூடப்பட்டுள்ளது அதன் விநியோகத் தொடரை கடுமையாக பாதித்துள்ளதுடன் விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கி உள்ளது.
சாலைகள் கடந்த 20 நாட்களாக சீரமைக்கப்படாதது குறித்து ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா அதிருப்தி தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக அவர் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியுடனும் பேசியுள்ளார். அப்போது அடுத்த 24 மணி நேரத்தில் இதுதொடர்பாக ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை மேற்கொள்வதாக அப்துல்லாவிடம் கட்கரி உறுதி அளித்துள்ளார்.
இதனிடையே ஜம்மு காஷ்மீர் பள்ளத்தாக்கில் விளையும் ஆப்பிள்களை ரயில் மூலம் டெல்லிக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆப்பிள்களை ஏற்றிச் செல்லும் முதல் சரக்கு ரயிலை காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார்.