‘கெஞ்சியும் கேட்கவில்லை...’ - டெல்லியில் பிஎம்டபுள்யூ விபத்தில் உயிரிழந்த அரசு அதிகாரி மனைவி வாக்குமூலம்

‘கெஞ்சியும் கேட்கவில்லை...’ - டெல்லியில் பிஎம்டபுள்யூ விபத்தில் உயிரிழந்த அரசு அதிகாரி மனைவி வாக்குமூலம்
Updated on
1 min read

புதுடெல்லி: டெல்லியில் உள்ள தவுலா குவான் அருகே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிஎம்டபுள்யூ கார் மோதிய விபத்தில் உயிரிழந்த மத்திய அரசு அதிகாரி நவ்ஜோத் சிங்கின் மனைவி, ‘உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கெஞ்சியும் விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் கேட்கவில்லை’ என காவல் துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

பொருளாதார விவகாரத் துறையின் துணைச் செயலாளர் நவ்ஜோத் சிங், ஞாயிற்றுக்கிழமை மதியம் டெல்லி பங்களா சாஹிப் குருத்வாராவில் இருந்து தனது மனைவி சந்தீப் கவுருடன் வந்து கொண்டிருந்தபோது, ​​ரிங் ரோட்டில் உள்ள தவுலா குவான் அருகே வேகமாக வந்த நீல நிற பிஎம்டபுள்யூ கார் அவர்களின் பைக் மீது பின்னால் இருந்து மோதியது. இதனால் இருவரும் நிலைகுலைந்து சாலையில் விழுந்தனர். நவ்ஜோத் சிங்குக்கு தலை, முகம் மற்றும் காலில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. சந்தீப் கவுருக்கு பல இடங்களில் எலும்பு முறிவுகள், தலையில் காயம் ஏற்பட்டன.

தற்போது இந்த விபத்து பற்றிய புதிய விவரங்களும் வெளியாகியுள்ளன. உயிரிழந்த நவ்ஜோத் சிங்கின் மனைவி அளித்த வாக்குமூலத்தில், “விபத்துக்குப் பிறகு, உடனடியாக சிகிச்சை பெறுவதற்காக என்னையும் எனது கணவரையும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு, விபத்தை ஏற்படுத்திய பெண் கார் ஓட்டுநரிடம் பலமுறை கெஞ்சினேன். ஆனால் அதனை மறுத்த அவர், விபத்து நடந்த இடத்தில் இருந்து 19 கி.மீ தொலைவில் உள்ள ஒரு மிகச் சிறிய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பிஎம்டபுள்யூ காரை ஓட்டி வந்த பெண், அதிவேகமாக ஓட்டி வந்ததால், காரின் கட்டுப்பாட்டை இழந்து, வாகனம் கவிழ்ந்து, எங்களின் மோட்டார் சைக்கிளில் நேரடியாக மோதியது” என்று தெரிவித்தார்.

ஜிடிபி நகரில் உள்ள நியூலைஃப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, நவ்ஜோத் சிங் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். அதே நேரத்தில் கவுர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், அவர்களின் மகன் வந்து அவரை வெங்கடேஸ்வர் மருத்துவமனைக்கு மாற்றினார். நவ்ஜோத் சிங்கின் மரணத்துக்கு காரணமாக பிஎம்டபுள்யூ காரை ஓட்டிவந்த பெண் ககன்ப்ரீத் கவுர் இன்று மருத்துவமனையில் கைது செய்யப்பட்டார். அவர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. காவல் துறையினர் அவர் மீது பிஎன்எஸ் பிரிவுகள் 281, 125, 105 மற்றும் 238-இன் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

உயிரிழந்த நவ்ஜோத் சிங்கின் மகன் நவ்னூர் சிங், "என் தந்தையை எய்ம்ஸ் அல்லது வேறு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் சென்றிருந்தால் அவரைக் காப்பாற்றியிருக்க முடியும். அதற்கு பதிலாக, பிஎம்டபுள்யூ ஓட்டிய பெண்ணுக்குச் சொந்தமான கிட்டத்தட்ட 20 கி.மீ தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்" என்று அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in