''நயன்தாரா வந்தால் இதைவிட இரண்டு மடங்கு கூட்டம் வரும்'' - விஜய்யை சீண்டிய சீமான்

''நயன்தாரா வந்தால் இதைவிட இரண்டு மடங்கு கூட்டம் வரும்'' - விஜய்யை சீண்டிய சீமான்
Updated on
1 min read

கோவை: ரஜினி, அஜித் வந்திருந்தால் இதைவிடவும் கூட்டம் வரும். நயன்தாரா வந்தால் இதைவிட இரண்டு மடங்கு கூட்டம் வரும். நீங்கள் கூட்டத்தை பார்க்காதீர்கள்; கொள்கையை பாருங்கள் என விஜய்க்கு திரண்ட கூட்டம் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சீமான், “விஜய் பரப்புரையை ஆரம்பித்துள்ளார், மக்கள் அதிகளவில் திரண்டுள்ளனர். திரையில் பார்த்த கலைஞர் தெருவுக்கு வருகிறார் என்பதால் விஜய்யை பார்க்க மக்கள் வந்துள்ளனர். நாங்கள் சின்ன பிள்ளைகளாக இருந்தபோது, எம்ஜிஆர், சிவாஜி வருகிறார் என மணிக்கணக்கில் காந்திருந்து நின்றிருக்கிறோம். நடிகர் வந்தால் கூட்டம் வரத்தான் செய்யும்.

சகோதரர் அஜித் வந்திருந்தால் இதைவிடவும் கூட்டம் வரும், ரஜினி வந்திருந்தாலும் இதை தாண்டி கூட்டம் வரும். நயன்தாராவை இறக்கிவிட்டால், இதைவிட இரண்டு மடங்கு கூட்டம் வரும். நீங்கள் கூட்டத்தை பார்க்காதீர்கள்; கொள்கையை பாருங்கள், இல்லையென்றால் உருப்படாது.

மக்களுக்காக பாடுபடும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சிதான், உங்களுக்கு ஒரு பிரச்சினை என்றாலும் நான் தான் வந்து நிற்பேன். அடுத்தாக மலைகளின் மாநாடு தருமபுரியில் நடத்துகிறோம்” என்றார்.

தவெக தலைவரும், நடிகருமான விஜய் திருச்சியில் நேற்று தனது பிரச்சார சுற்றுப்பயணத்தை தொடங்கினார். இதற்கு அதிகளவில் கூட்டம் திரண்டது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in