பஹல்காமில் பலியான 26 பேரை விட பணம் முக்கியமா? - இந்தியா-பாக். கிரிக்கெட் போட்டி குறித்து ஒவைசி விமர்சனம்

பஹல்காமில் பலியான 26 பேரை விட பணம் முக்கியமா? - இந்தியா-பாக். கிரிக்கெட் போட்டி குறித்து ஒவைசி விமர்சனம்
Updated on
1 min read

புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் போட்டியை நடத்த மத்திய பாஜக அரசு எடுத்த முடிவை ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசி கடுமையாக சாடினார். மேலும், 26 பேரின் உயிரை விட பணம் முக்கியமா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

துபாயில் இன்று பாகிஸ்தானுடன் இந்தியா மோதும் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த சூழலில், ஊடகங்களுக்கு பேட்டி அளித்த ஒவைசி, "அசாம் முதல்வர், உத்தரப் பிரதேச முதல்வர் மற்றும் அவர்கள் அனைவருக்கும் எனது கேள்வி என்னவென்றால், பஹல்காமில் 26 பேரை சுட்டுக் கொன்ற பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியை விளையாட மறுக்க உங்களுக்கு அதிகாரம் இல்லையா?.

இரத்தமும் நீரும் ஒன்றாகப் பாய முடியாது, பேச்சுவார்த்தையும் பயங்கரவாதமும் ஒன்றாக நடக்காது என்று நீங்கள் சொன்னீர்கள். ஆனால், ​​பிசிசிஐக்கு ஒரு கிரிக்கெட் போட்டியிலிருந்து எவ்வளவு பணம் கிடைக்கும். ரூ. 2,000 கோடி, ரூ. 3,000 கோடி கிடைக்குமா?. 26 பேரின் உயிர்களை விட பணம் முக்கியமா என்பதை பாஜக சொல்ல வேண்டும். நாங்கள் நேற்றும் அந்த 26 மக்களுடன் நின்றோம், இன்றும் அவர்களுடன் நிற்கிறோம், நாளையும் அவர்களுடன் நிற்போம்” என்று அவர் கூறினார்.

ஆம் ஆத்மி கட்சியும் இந்த விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால், ‘பாகிஸ்தானுடன் இந்தப் போட்டியை ஏற்பாடு செய்ய வேண்டிய அவசியம் என்ன? முழு நாடும் இந்த போட்டி நடக்கக்கூடாது என்று கூறுகிறது. பிறகு ஏன் இது ஏற்பாடு செய்யப்படுகிறது? இதுவும் டிரம்பின் அழுத்தத்தின் கீழ் செய்யப்படுகிறதா? டிரம்பிற்கு நீங்கள் எவ்வளவு தலைவணங்குவீர்கள்?’ என்று கேள்வி எழுப்பினார்.

சிவசேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரேவும் இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கு எதிராக பாஜகவை கண்டித்து இன்று மகாராஷ்டிரா முழுவதும் 'சிந்தூர்' போராட்டங்களை அறிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in