Published : 14 Aug 2014 08:39 AM
Last Updated : 14 Aug 2014 08:39 AM

கேன்சர் நோயாளியுடன் உரையாடிய ராகுல் டிராவிடின் மனிதநேயம்

தலைக்கு பின்னால் ஒளிவட்டம் மின்ன மின்ன வலம் வரும் ஹீரோக்களில் பலர் உண்மையில் அந்த ஒளிவட்டத்திற்கு தகுதியற்ற வர்களாகவே இருப்பார்கள். ஆனால் இந்தியாவில் அவருக்கு கிடைக்கும் புகழுக்கு எல்லா விதங்களிலும் பொருந்தக்கூடிய ஒரு ஹீரோ இருக்கிறார் என்றால் அது கிரிக்கெட் உலகிலேயே கூட அதிகம் கொண்டாடப்படாத ராகுல் டிராவிட்தான்.

பொதுவாகவே ராகுல் டிராவிட் மானுட நேயமிக்கவர் என்று அறியப்படுபவர். சில மாதங்களுக்கு முன்பு தன்னிடம் பேச வேண்டும் என்று விரும்பிய கேன்சர் நோயாளிக்கு ஸ்கைப்பில் தொடர்பு கொண்டு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் டிராவிட். இப்போது அந்த நோயாளி உயிருடன் இல்லை. ஆனால், ராகுல் டிராவிடின் இந்த அற்புதமான செயலை நெகிழ்ச்சியுடன் வலைத்தளம் ஒன்றில் நினைவுகூர்ந்திருக்கிறார் கேன்சர் நோயாளியின் நண்பர். “என் நண்பனுக்கு டிராவிடை மிகவும் பிடிக்கும். ரத்த புற்று நோயால் இறந்து கொண்டிருந்த அவனை எப்படியாவது டிராவிடுடன் பேச வைக்க வேண்டும் என்று எல்லா விதங்களிலும் முயற்சி செய்தோம். எங்களுக்கு நம்பிக்கையே இல்லை. ஆனால் ஒரு நாள் டிராவிடின் மனைவி விஜேதாவிடமிருந்து அழைப்பு வந்தது. நேரில் வர முடியாது என்றாலும் டிராவிட் ஸ்கைப் மூலம் உரையாட விரும்புகிறார் என்று சொன்னார் அவர்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம், எனது நண்பனோடு, அவனது உறவினர்களோடு, மருத்துவர் களோடு, மருத்துவமனையில் இருந்த பிற நோயாளிகளோடு உரையாடினார் ராகுல்” என்று சொல்லியிருக்கிறார் அந்த நண்பர்.

டிராவிடின் ஸ்கைப் உரை யாடலின் ஒரு பகுதியும் அந்த வலைத்தளத்தில் பதிவேற்றப்பட் டிருக்கிறது. தனது குழந்தையை கேன்சர் நோயாளிக்கு அறிமுகப் படுத்திவைக்கும் டிராவிட், “பையாவிடம் கெட் வெல் என்று சொல்” என்கிறார். மனைவியை அறிமுகப்படுத்துகிறார். நோயாளி யின் உடல் நலன் பற்றி அக்கறை யுடன் விசாரிப்பவர், “தைரியமாக இருங்கள், உங்களது தைரியம் உங்களை காப்பாற்றும்” என்று உற்சாகப்படுத்துகிறார்.

பிற நோயாளிகளிடமும் கனிவுடன் விசாரிக்கிறார். “இரண்டு நாட்களுக்கு முன்பு சோர்வாக இருந்தார். உங்களுடன் பேசியதில் உற்சாகமாக இருக்கிறார்” என்று நோயாளியைப் பற்றி குறிப்பிடுகிறார் மருத்துவர். “அவருடன் பேசியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இதை சாத்தியப்படுத்திய அவரது அற்புதமான நண்பர்களுக்கு நன்றி” என்கிறார் டிராவிட்.

“எனது நண்பன் உயிர் பிழைக்க வில்லை. ஆனால் அவன் நிச்சயம் மன நிறைவுடன் இறந்திருப்பான்” என்று நெகிழ்ச்சியுடன் தனது வலைப்பதிவு குறிப்பை முடிக்கிறார் நோயாளியின் நண்பர்.

கிரிக்கெட் கிரவுண்டை தாண்டிய அபூர்வமான ஹீரோ ராகுல் டிராவிட்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x