குடியரசு துணைத் தலைவராக பதவியேற்றார் சி.பி.ராதாகிருஷ்ணன்: நிகழ்ச்சியில் ஜகதீப் தன்கர் பங்கேற்பு

குடியரசு துணைத் தலைவராக பதவியேற்றார் சி.பி.ராதாகிருஷ்ணன்: நிகழ்ச்சியில் ஜகதீப் தன்கர் பங்கேற்பு
Updated on
1 min read

புதுடெல்லி: நாட்டின் 15-வது குடியரசு துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் குடியரசு முன்னாள் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் பங்கேற்றது கவனம் பெற்றது.

குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜகதீப் தன்கர் உடல்நிலை காரணமாக கடந்த ஜூலை 21-ம் தேதி பதவியை ராஜினமா செய்தார். இதை அடுத்து, அந்த பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது.

ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி, மகாராஷ்டிர ஆளுநராக இருந்தவரும் தமிழகத்தைச் சேர்ந்தவருான சி.பி. ரதாகிருஷ்ணனை களமிறக்கியது. இதையடுத்து, எதிர்க்கட்சிகளின் கூட்டணியான இண்டியா கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற சுதர்சன் ரெட்டியை களமிறக்கியது. கடந்த 9-ம் தேதி நடைபெற்ற தேர்தலில், சி.பி. ராதாகிருஷ்ணன் 152 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இதையடுத்து, குடியரசு துணைத் தலைவராக இன்று அவர் பதவியேற்றார். குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற இந்த பதவியேற்பு விழாவில், குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். கடவுளின் பெயரால் சி.பி. ராதாகிருஷ்ணன் ஆங்கிலத்தில் பதவியேற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வில், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தலைவர் ஜே.பி. நட்டா, குடியரசு முன்னாள் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், வெங்கைய்யா நாயுடு, ஹமீத் அன்சாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in